சிகிச்சை பலனின்றி நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்…

தமிழக சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களிடையே தனித்த இடத்தைப் பெற்றவர் நடிகர் முத்துக்காளை. இவரது மனைவி மாலதி (47) கடந்த சில நாட்களாக கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலதிக்கு தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதையடுத்து, சுமார் 19 நாட்களுக்கு முன்பு சென்னை கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததுடன், அறுவை சிகிச்சையும் மேற்கொண்டனர். ஆரம்பத்தில் சிகிச்சைக்கு நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாக கூறப்பட்டாலும், பின்னர் நோய் தொற்று ஏற்பட்டதால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. குறிப்பாக கடந்த சில நாட்களாக மூச்சுத்திணறல் அதிகரித்ததால், அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

மனைவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நடிகர் முத்துக்காளை, தமிழக முதல்வர் விஜய் உதவி செய்ய வேண்டும் என வீடியோ வாயிலாக உருக்கமான கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களுடன் ஆலோசித்து, மேம்பட்ட சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுத்தார்.

ஆனால் மருத்துவர்களின் தீவிர முயற்சிகளும் பலனளிக்காமல், இன்று காலை 9 மணியளவில் மாலதி உயிரிழந்தார். அவரது உடல் இறுதிச்சடங்கிற்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள சங்கம்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இன்று இரவு சொந்த ஊரில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

மாலதியின் மறைவு நடிகர் முத்துக்காளை குடும்பத்தினரையும், திரையுலகினரையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related News

Latest News