பள்ளிக் குழந்தைகளை வித்தியாசமாக வரவேற்கும் ஆசிரியர்

308
Advertisement

வகுப்பறைக்கு வரும் குழந்தைகளைப் புதுமையாக வரவேற்ற ஆசிரியரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

குழந்தைகள் பள்ளிக்கு வருவதை இனிமையான அனுபவமாக்கியுள்ள அந்தப் பள்ளி ஆசிரியரின் செயலால் குழந்தைகள் உற்சாகமாகியுள்ளனர்.

பள்ளிக்குச் செல்வதென்றாலே பல குழந்தைகளுக்கு வேப்பங்காயாகக் கசக்கும். அத்தகைய குழந்தைகளின் பெற்றோர் படும்பாடு திண்டாட்டமாக இருக்கும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.

ஆனால், ஓர் ஆசிரியையின் செயல் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

அந்த வகையில் ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில் காணும் ஆசிரியரின் செயல் பள்ளிக் குழந்தைகளை மட்டுமன்றி, பெற்றோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில் வகுப்பறையின் வாசலில் குழந்தைகளை வரவேற்க ஆசிரியர் காத்திருக்கிறார். அருகே ஒரு சிறிய குறியீட்டுப் பலகை உள்ளது. அதில் தங்களை எப்படி வரவேற்க வேண்டும் என்பது பற்றி சில குறியீடுகள் உள்ளன. அந்தக் குறியீடுகளைக் குழந்தைகள் தொட்டுத் தேர்வு செய்தனர்.

அவர்கள் தொடும் குறியீடுகளுக்குத் தகுந்தவாறு ஆசிரியர் நடனமாடியும் அரவணைத்தும் குழந்தைகளை வரவேற்றார். இதனால், மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் வகுப்பறைக்குள் சென்றனர்.

பள்ளிக் குழந்தைகளின் தயக்கத்தையும் பயத்தையும் போக்கிய ஆசிரியரின் இந்தப் புதுமையான செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளதோடு, குழந்தைகளின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

நண்பரைப்போல் இன்முகத்தோடு வரவேற்கும் ஆசிரியையின் இந்தச் செயலால் இனிமையான கற்றல் சூழல் நிலவும் என்பதில் சந்தேகமில்லை.