‘IT’ ஊழியர்களுக்கு அதிர்ச்சி!!

இந்தியாவின் முன்னணி ஐடி மற்றும் மென்பொருள் நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் இருபத்தி நான்காயிரம் வேலைவாய்ப்புகளை அதிரடியாக குறைத்துள்ளதாக ஒரு அதிர்ச்சியளிக்கும் அறிக்கை வெளியாகியுள்ளது.

முன்னணி மனிதவள நிறுவனமான எக்ஸ்பீனோ வெளியிட்டுள்ள இந்த தரவுகளின்படி, கடந்த பன்னிரண்டு மாதங்களில் மட்டும் ஐடி துறையை விட்டு தொண்ணூற்று இரண்டாயிரம் பேர் வெளியேறியுள்ளனர். ஆனால், புதியதாக வெறும் அறுபத்தி எட்டாயிரம் பேர் மட்டுமே வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாபெரும் வேலை இழப்பிற்கு செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியே மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வழக்கமாக செய்யப்படும் அப்ளிகேஷன் மெயின்டனன்ஸ், மேனுவல் டெஸ்டிங் மற்றும் லெவல் ஒன் சப்போர்ட் போன்ற வேலைகளை தற்போது ஏஐ மிக எளிதாக செய்து முடிப்பதால், ஐந்து முதல் பன்னிரண்டு ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஐடி ஊழியர்கள் தங்களது வேலையை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒருபுறம் பழைய வேலைகள் குறைந்தாலும், மறுபுறம் ஏஐ, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற சிறப்பு தொழில்நுட்பங்களுக்கான வேலைவாய்ப்புகள் பதினாறு சதவீதம் அதிகரித்துள்ளன என்பதே இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும்.

எனவே, தற்போது வேலையை இழக்கும் பாரம்பரிய ஐடி ஊழியர்கள், இந்த புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு ஐடி துறையில் எதிர்காலம் இல்லை என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக நிறுவனங்கள் தங்களது செலவுகளை குறைப்பதும் இந்த ஆட்குறைப்பிற்கு ஒரு காரணமாகும்.

இருப்பினும், செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ், ஹெச்சிஎல் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் மீண்டும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது, ஐடி ஊழியர்கள் மற்றும் வேலை தேடும் பட்டதாரிகள் மத்தியில் ஒரு சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News