அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நீண்டநாள் நிலுவை கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றும் நோக்கில், சேவை நிலை தொடர்பான ஆணைகள் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.2004, 2005, 2006 ஆம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பின்னர் 2006 ஜூன் 1 முதல் காலமுறை ஊதிய முறையில் பணிநியமனம் பெற்றனர்.
இந்த சூழலில், 2016 ஜூன் 1 அன்று தேர்வு நிலை பெற்ற ஆசிரியர்கள் தற்போது 2026 ஜூன் 1 அன்று சிறப்பு நிலை பெற்றுள்ளனர். ஆனால் பலருக்கும் அதற்கான அதிகாரப்பூர்வ ஆணைகள் இன்னும் வழங்கப்படாததால், ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு வட்டாரத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தி ஆசிரியர்களின் சேவை விவரங்களை சரிபார்த்து, நிலுவை ஆணைகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் செயல்முறை வேகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேநேரத்தில், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் சுற்றறிக்கை வெளியிட்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தியுள்ளார். முகாம்களில் தாமதம் அல்லது குறைபாடு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது
