அஜித் அகர்கர் பதவி காலி ? – BCCI எடுக்கப்போகும் அதிரடி முடிவு!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரின் பதவி தற்போது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. பிசிசிஐ-க்கும் அஜித் அகர்கருக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் காரணமாக, அடுத்த ஒரு மாதத்திற்குள் அவர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.

அவருக்குப் பதிலாக, தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் ‘வெரி வெரி ஸ்பெஷல்’ வி.வி.எஸ் லக்ஷ்மன் இந்தப் பொறுப்பிற்கு வர அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைய வேண்டிய அகர்கரின் ஒப்பந்தம், தற்போது மூன்று மாத காலத்திற்கு மட்டும் தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னால் ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த விவாதங்களே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அண்மையில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரோடு, ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வர அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு திட்டமிட்டிருந்தது.

இது தொடர்பாகப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான நிர்வாகத்துடனும் ரகசிய ஆலோசனைகள் நடத்தப்பட்டன. ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்தத் தீர்மானமிக்கப் போட்டியில் ரோஹித் சர்மா அபாரமான ஒரு சதத்தை விளாசி, தேர்வாளர்களின் திட்டத்தைத் தனது பேட் மூலமே தவிடுபொடியாக்கிவிட்டார்.

இந்த விவகாரத்தில் அஜித் அகர்கருக்கு மற்றொரு மிகப்பெரிய பின்னடைவாக, பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைக்கியா அதிரடியான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அஜித் அகர்கரிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமலேயே, “ரோஹித் சர்மா இந்திய அணியின் ஒரு தவிர்க்க முடியாத வீரர், அவர் விருப்பப்படும் வரை அணியில் நீடிப்பார்” என சைக்கியா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

வாரியத்தின் உயர் அதிகாரியே இத்தகைய கருத்தைத் தெரிவித்தது, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரை ஒரு தற்காலிகமான நிலையில் நிறுத்தியுள்ளது. 2027 உலகக்கோப்பையில் ரோஹித் விளையாடுவதை அகர்கர் விரும்பவில்லை என்பதுதான் இந்த மோதலின் ஆணிவேராகச் சொல்லப்படுகிறது.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் விளையாடிய 10 போட்டிகளில் இந்திய அணி 8 போட்டிகளில் தோல்வியடைந்தது பிசிசிஐ மேலிடத்தைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தொடர் தோல்விகள் குறித்து இன்னும் முறையான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படாத நிலையில், அதற்குள்ளாகவே இந்திய அணி இலங்கைத் தொடருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

ஒருபுறம் இந்திய அணியின் மாறுதல் காலம் (Transition) குறித்துப் பேசப்பட்டாலும், மறுபுறம் அனுபவ வீரர்களைக் கையாள்வதில் தேர்வாளர்கள் தடுமாறுவது வெளிப்படையாகத் தெரிகிறது. அஜித் அகர்கரின் கிரிக்கெட் நிர்வாகப் பயணம் இதோடு முடிவுக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News