இயற்கையின் விதிகள் என்று நாம் இதுவரை படித்து வந்த பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மாற்றியமைக்கும் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு இப்போது நிகழ்ந்துள்ளது. பிரபஞ்சம் முழுவதும் நான்கு அடிப்படை விசைகளால் மட்டுமே இயங்குகிறது என்பதுதான் இதுவரை நவீன அறிவியலின் நம்பிக்கையாக இருந்தது. அதாவது, நாம் கீழே விழாமல் தடுக்கும் ஈர்ப்பு விசை, மின்சாரம் மற்றும் காந்த சக்தியை உருவாக்கும் மின்காந்த விசை, மற்றும் அணுக்களுக்குள் இருக்கும் இரண்டு வகையான அணுக்கரு விசைகள் மட்டுமே இந்த உலகை ஆளுகின்றன என்று நாம் நினைத்தோம்.
ஆனால், இப்போது இவை அனைத்தையும் தாண்டி, மிகவும் மர்மமான ‘ஐந்தாவது விசை’ (Fifth Force) ஒன்று நமது சூரிய குடும்பத்திலேயே ஒளிந்திருக்க வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் ஒரு அதிரடி தகவலை வெளியிட்டுள்ளனர் இந்த ‘ஐந்தாவது விசை’ ஏன் இவ்வளவு முக்கியமானது? என்றால், நாம் அறிந்த ஈர்ப்பு விசை என்பது கோள்களைச் சுற்றி வர உதவுகிறதே தவிர, பிரபஞ்சத்தில் இருக்கும் விண்மீன் மண்டலங்கள் எப்படி ஒன்றாக இணைந்துள்ளன என்பதையோ, அல்லது பிரபஞ்சம் ஏன் மிக வேகமாக விரிவடைந்து கொண்டே போகிறது என்பதையோ முழுமையாக விளக்க முடியவில்லை.
இந்த இடைவெளியைத் தான் விஞ்ஞானிகள் “இருண்ட ஆற்றல்” (அதாவது Dark Energy) மற்றும் “இருண்ட பருப்பொருள்” (அதாவது Dark Matter) என்று அழைக்கிறார்கள். இவை என்னவென்று இதுவரை யாருக்கும் தெரியாது. இந்த மர்மமான இருண்ட ஆற்றலுக்குப் பின்னால் இருப்பதுதான் அந்த ஐந்தாவது விசை என்று நாசாவின் ஜெட் புரோபல்ஷன் (Jet Propulsion) ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஸ்லாவா துரிஷேவ் (Dr Slava Turyshev) வாதிடுகிறார்.
இந்த ஐந்தாவது விசையைத் தேடும் முயற்சி இன்று நேற்று தொடங்கியதல்ல. கடந்த 2015-ம் ஆண்டு ஹங்கேரிய நாட்டு விஞ்ஞானிகள், கதிரியக்கச் சிதைவின் போது ஒரு விசித்திரமான மாற்றத்தைக் கவனித்தனர். அது எலக்ட்ரானை விட 30 மடங்கு கனமான ஒரு புதிய துகளாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.
அதேபோல், சமீபத்தில் பெர்மி லேப் (Fermilab) நடத்திய ஆய்வில், ‘மியூயான்’ (Muon) எனப்படும் துகள்கள் தற்போதைய அறிவியல் விதிகளுக்கு முரணாகச் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விசித்திரமான மாற்றங்கள் அனைத்தும் ஐந்தாவது விசை இருப்பதற்கான வலுவான ஆதாரங்களாகப் பார்க்கப்படுகின்றன.
நாசாவின் புதிய ஆய்வறிக்கையின்படி, நாம் கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் விண்மீன் மண்டலங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நமது சூரிய குடும்பத்திற்குள்ளேயே மிகத் துல்லியமான ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் இந்த ஐந்தாவது விசையை நம்மால் நேரடியாகக் கண்டறிய முடியும்.
இதற்காக யூக்ளிட் (Euclid) மற்றும் தேசி(DESI) போன்ற அதிநவீன கருவிகள் மூலம் ஆய்வுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த ஐந்தாவது விசை மட்டும் உறுதி செய்யப்பட்டால், ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டன் போன்ற அறிஞர்களின் விதிகளையும் தாண்டி, பிரபஞ்சத்தின் புதிய ரகசியங்கள் நமக்குத் தெரிய வரும்.
