வேலை தேடும் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! இந்த 3 துறை தான் இனி ‘ராஜா’!

படித்து முடித்துவிட்டு நல்ல வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு ஒரு மாபெரும் நற்செய்தி! இந்த நிதியாண்டின் இரண்டாவது பாதியில், இந்தியாவில் வேலைவாய்ப்புகள் பிரம்மாண்டமாக அதிகரிக்கப் போவதாக ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. எந்தெந்த துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் வரப்போகிறது தெரியுமா?

இந்தியாவில் வருகின்ற அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில், வேலைவாய்ப்பு விகிதம் 5.4 சதவீதமாக உயரும் என இந்தியாவின் முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனமான ‘டீம் லீஸ் சர்வீசஸ்’ (TeamLease Services) தனது புதிய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும்போது, இதுவே மிக அதிகபட்ச வேலைவாய்ப்பு வளர்ச்சியாகும். குறிப்பாக, இ-காமர்ஸ், தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சுற்றுலாத்துறை மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளில் அதிக அளவிலான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளதாக இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் 66 சதவீதமும், நடுத்தர நிறுவனங்களில் 59 சதவீதமும் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன. நகரங்களைப் பொறுத்தவரை, தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகரான பெங்களூரு 68 சதவீத புதிய வேலைவாய்ப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஐதராபாத் மற்றும் புனே நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மின்சார வாகனத் தயாரிப்பு மற்றும் வங்கித் துறைகளிலும் அதிக அளவிலான திறமையான இளைஞர்கள் தேவைப்படுவதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், தங்களுக்குத் தேவையான சரியான திறமையுள்ள ஆட்களைக் கண்டுபிடிப்பது பெரிய சவாலாக இருப்பதாக 72 சதவீத நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.

குறிப்பாக, ஐ.டி, விற்பனை மற்றும் மார்க்கெட்டிங், மற்றும் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து வேலையில் அமர்த்த சராசரியாக முப்பத்தி ஐந்து முதல் நாற்பத்தி ஐந்து நாட்கள் வரை ஆவதாக நிறுவனங்கள் கூறுகின்றன.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ (AI) தொழில்நுட்பம் வந்த பிறகு பலரது வேலை பறிபோகும் என்ற ஒரு பொதுவான அச்சம் மக்களிடையே இருந்து வருகிறது.

ஆனால், இந்த அறிக்கையின்படி 85 சதவீத நிறுவனங்கள் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், அவர்கள் அதனை இருக்கும் ஊழியர்களின் வேலைப்பளுவைக் குறைப்பதற்கான ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்களே தவிர, மனிதர்களுக்குப் பதிலாக ஏ.ஐ-யை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

எனவே, தங்களின் திறமைகளை வளர்த்துக்கொண்டு, புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் இளைஞர்களுக்கு, வருங்காலத்தில் பல முன்னணி நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் கூடிய பிரகாசமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

Related News

Latest News