இன்றைய காலகட்டத்தில் மொபைல் ரீசார்ஜ் என்றாலே வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் அதோடு சேர்த்து இன்டர்நெட் டேட்டாவும் கட்டாயமாக வழங்கப்படுகிறது.
ஆனால், ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத முதியவர்கள், கீபேட் போன் வைத்திருப்பவர்கள் மற்றும் இன்டர்நெட் தேவைப்படாத சாதாரண மக்கள், தங்களுக்குப் பயன்படாத டேட்டாவிற்கும் சேர்த்து அதிக பணம் கொடுத்து ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இப்படிப்பட்ட எளிய மக்களின் பண விரயத்தைத் தடுக்கும் வகையில், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘ட்ராய்’ தற்போது ஒரு அதிரடியான புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.
இதன்படி, ஜியோ, ஏர்டெல், விஐ உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், இன்டர்நெட் டேட்டா இல்லாத வெறும் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளை மட்டுமே கொண்ட சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை அதிக அளவில் அறிமுகப்படுத்த வேண்டும் எனத் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தப்பட்ட புதிய சட்டத்தின்படி, ஏற்கனவே முப்பது நாட்கள் அல்லது அதற்கும் குறைவான நாட்களுக்கு டேட்டாவோடு சேர்த்து என்னென்ன ரீசார்ஜ் திட்டங்கள் இருக்கிறதோ, அதே நாட்களுக்கு டேட்டா இல்லாத சாதாரண ரீசார்ஜ் திட்டங்களையும் நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும்.
டேட்டா வழங்கப்படாததால், இந்த ரீசார்ஜ் திட்டங்களின் விலை முன்பை விடக் கணிசமாகக் குறைவாகவே இருக்கும். மேலும், ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் ரீசார்ஜ் செய்துகொள்ளும் வகையிலான சிறப்பு மாதாந்திரத் திட்டங்களையும் நிறுவனங்கள் கட்டாயம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
ஒருவேளை முப்பத்தி ஒரு நாட்கள் கொண்ட மாதத்தில் அந்தத் தேதி வரவில்லை என்றால், அந்த மாதத்தின் கடைசி நாளன்று ரீசார்ஜ் முடிவடையும் வகையில் நிறுவனங்கள் தங்களது திட்டங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
இதுமட்டுமின்றி, அதிக நாட்களுக்கான வேலிடிட்டி தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கும், டேட்டா இல்லாத நீண்டகால ரீசார்ஜ் திட்டங்களை நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என ட்ராய் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய அரசிதழில் இந்தச் சட்டம் வெளியாகி அடுத்த முப்பது நாட்களில் இது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துவிடும். இந்த புதிய விதிமுறைகளின் மூலம், குறைந்த வருமானம் பெறும் எளிய மக்களும் தங்களுக்குத் தேவையான சேவைகளுக்கு மட்டுமே இனி பணம் செலுத்தினால் போதும் என்பதால், இந்திய அரசின் இந்த அறிவிப்பு மொபைல் பயனர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
