Gemini-யில் வந்த செம்ம அப்டேட்! Google கொடுத்த மாபெரும் ‘சர்ப்ரைஸ்’?

இன்றைய நவீன உலகில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்பு முறையை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்கும் ஒரு மாபெரும் அறிவிப்பை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் படிப்பதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து புத்தகங்கள் வாங்கும் நிலையை மாற்றி, நூற்றுக்கணக்கான பாடப்புத்தகங்களை முற்றிலும் இலவசமாகத் தனது ‘ஜெமினி நோட்புக்’ (Gemini Notebook) என்ற ஏஐ (AI) தளத்தில் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கல்விப் பதிப்பகங்களான OpenStax (ஓபன் ஸ்டாக்), Open Textbook Library (ஓபன் டெக்ஸ்ட் புக் லைப்ரரி) மற்றும் S. Chand Publishing (எஸ். சந்த் பப்ளிஷிங்) போன்ற நிறுவனங்களின் புத்தகங்களை மாணவர்கள் இனி எந்தவொரு கட்டணமும் இன்றி இலவசமாகப் படித்துக்கொள்ளலாம்.

கூகுளின் இந்த புதிய ஏஐ தொழில்நுட்பம் மாணவர்களுக்கு எப்படிப் பயன்படும்? வாருங்கள் மிக விரிவாகப் பார்க்கலாம். இந்த ஜெமினி நோட்புக் என்பது வெறும் புத்தகங்களைப் படிக்கும் ஒரு சாதாரண பிடிஎஃப் (PDF) ரீடர் கிடையாது.

இது மாணவர்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன ஏஐ ஆசிரியர் என்றே சொல்லலாம். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகத்தை இந்த ஆப்பில் ஆட் செய்துவிட்டால் போதும், அந்தப் புத்தகத்தில் உள்ள எந்தவொரு கடினமான கேள்வியைக் கேட்டாலும், ஜெமினி ஏஐ அந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்களை வைத்து மிகத் துல்லியமான பதில்களை வழங்கும்.

அதுமட்டுமில்லாமல், அந்தப் பதில் புத்தகத்தில் எந்தப் பக்கத்தில் இருக்கிறது என்பதற்கான நேரடி லிங்கையும் அது காட்டிவிடும். இதனால் மாணவர்கள் இணையத்தில் உள்ள தவறான தகவல்களைப் படித்து ஏமாற வேண்டிய அவசியமே இருக்காது.

இதைவிட ஒரு சூப்பரான அம்சம் என்னவென்றால், ஒரு பெரிய பாடத்தை மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், அதை ஒரு சுருக்கமான ஸ்டடி கைடாக (Study Guide) இந்த ஏஐ மாற்றித் தரும்.

மேலும், மாணவர்கள் தங்களைத் தாங்களே சோதித்துப் பார்க்க, அந்தப் பாடத்தில் இருந்து பிராக்டிஸ் குவிஸ் (Practice Quiz) எனப்படும் மாதிரித் தேர்வுகளையும், ஃபிளாஷ் கார்டுகளையும் இந்த ஜெமினி ஏஐ நொடிப்பொழுதில் உருவாக்கிக் கொடுக்கும்.

இந்த இலவசப் புத்தகங்களைப் பெற, மாணவர்கள் ஜெமினி நோட்புக்கில் உள்ள ‘ஆட் சோர்சஸ்’ (Add Sources) என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் ‘டெக்ஸ்ட்புக்ஸ்’ (Textbooks) என்பதைத் தேர்ந்தெடுத்தால் போதும்.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், நம்பகமான தகவல்களை அவர்களுக்குக் கொண்டு சேர்க்கவும் கூகுள் எடுத்துள்ள இந்த மாபெரும் ஏஐ முன்னெடுப்பு, கல்வித்துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது.

Related News

Latest News