வீட்டுக்குள்ளே ஒரு வங்கி

211
Advertisement

விரைவான பொருளாதார வளர்ச்சியை நோக்கி
ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
இறக்கை முளைக்காத குறைதான் மனிதர்களுக்கு.

பணம் பணம் பணம்னு ஓடிக்கொண்டே இருக்கும்
மனிதர்கள் பணம் சம்பாதிப்தற்கு உடலும் மனமும்
ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை
கவனத்தில் கொள்வதில்லை.

குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பேணவேண்டிய
பெண்களும் பம்பரமாய்ச் சுற்றிச் சுற்றி வருகின்றனர்..

ஆரோக்கியத்தைப் பேணுவதற்குதான் டாக்டர் இருக்கிறாரே…
மருந்துகள் இருக்கிறதே…மருத்துவமனை இருக்கிறதே
என்னும் மனநிலையில் பலர் தங்களின் வீட்டிலிருந்த
ஒரு டாக்டரை மறந்தே விட்டனர்.

அவர்தான் அஞ்சறைப் பெட்டி.

இன்றும் குக்கிராமங்களிலுள்ள வீடுகளை இந்த
அஞ்சறைப் பெட்டிகள் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.
சமையலறையின் தவிர்க்கமுடியாத அங்கம்தான் இந்த
அஞ்சறைப் பெட்டி.

செவ்வக வடிவில் ஐந்தே ஐந்து அறைகளுடன் பார்ப்பதற்கும்
கையாள்வதற்கும் வசதியாக இருக்கும் இந்த மரப்பெட்டி
காரணப் பெயராக அஞ்சறைப் பெட்டி என்றே காலங்
காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

நான்கு அறைகள் ஒரே அளவில் சதுர வடிவிலும் ஒரேயொரு
அறை மட்டும் செவ்வக வடிவிலும் அமைந்திருக்கும் இந்த
அஞ்சறைப் பெட்டி ஒரு மருத்துவ உபகரணம் எனில் மிகையல்ல.

கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், மஞ்சள் ஆகிய ஐந்து
பொருட்களும் இந்த தனித்தனி அறைகளில் நிரப்பப்
பட்டிருக்கும். மரப்பெட்டி என்பதால் இப்பெட்டியினுள்
பூச்சிகள் நுழையாது.

மூடிவைக்கவும் கதவு போன்ற மேற்புற அமைப்பு இருப்பதால்
தூசிகள் விழாமல் தூய்மையாக இருக்கும். வெயில் காலம்,
மழைக்காலம், பனிக்காலம் போன்ற எக்காலத்திலும் அஞ்சறைப்
பெட்டியிலுள்ள பொருட்களின் தன்மையோ தரமோ மாறாமல்
ஒரே சீராக இருக்கும்.

பெயரென்னவோ அஞ்சறைப் பெட்டிதான். ஆனாலும்,
இதனுள் மேலும்சில பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும்.
கடுகோடு சேர்ந்து உளுந்தம் பருப்பு, கொத்தமல்லி, சுக்கு,
பெருங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு,
ஏலக்காய், கிராம்பு ஓமம், கசகச அரிசி போன்றவற்றையும்
பெண்கள் வைத்திருப்பவர்.

சமையலின்போது எந்தப் பொருளும் விடுபடாமலிருக்க
இந்த அஞ்சறைப் பெட்டி தக்க தருணத்தில் ‘நினைவூட்டி’யாகத்
திகழும்.

மசாலாப் பெட்டியான இந்த அஞ்சறைப் பெட்டிதான் பல
பெண்களுக்கு வங்கிப் பாஸ் புக், உண்டியல் எல்லாம். பணம்,
சில்லரைக் காசுகளை இதில்தான் போட்டு வைத்திருப்பர்.

இப்படி சமையலுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும்
ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருப்பதால், சமையலின்போது
எந்தப் பொருளும் விடுபடுவதில்லை. உரிய பொருட்கள்
எல்லாம் அந்தந்த சமையலின்போது கண்ணில்பட்டு
சேர்க்கப்பட்டுவிடுவதால் சமையல் சுவையாக மணமாக
உணவு ஆரோக்கியமாக இருக்கும்.

நகர்ப்புற மயமாதல், நாகரிக மயமாதல் போன்றவற்றாலும்
அஞ்சறைப் பெட்டியை நாம் மறந்துவிட்டோம். இனியாவது
நமது வீட்டில் அஞ்சறைப் பெட்டியை இடம்பெறச் செய்து
நமது ஆரோக்கியத்தைப் பேணுவோம்.

இந்தக் கொரோனா தந்த பாடம் நமது பாரம்பரிய பழக்க
வழக்கங்களை மறந்ததுதான். அஞ்சறைப் பெட்டி நமது
வீட்டிலுள்ள டாக்டர் மற்றும் மெடிக்கால் ஷாப் எனில் மிகையல்ல.