அதிரடியாக குறையும் தங்கம் விலை? நகைக் கடன் வாங்கியவர்களுக்கு வரப்போகும் நோட்டீஸ்!

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது புதிதாக நகை வாங்க நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், தங்களது அவசரத் தேவைக்காக வங்கிகளில் நகையை அடகு வைத்துக் கடன் வாங்கிய சாமானிய மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக மாறியுள்ளது.

ஒரு காலத்தில் இருபத்திரண்டு கேரட் தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சத்து இருபத்தி மூன்றாயிரம் ரூபாய் வரை உச்சம் தொட்ட நிலையில், பின்னர் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் என்ற அளவில் நீடித்து வந்தது.

ஆனால் இப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு சவரன் தங்கம் தொண்ணூற்று இரண்டாயிரம் ரூபாய் என்ற அளவிற்குக் கடுமையாகச் சரிந்துள்ளது.

இந்தத் திடீர் வீழ்ச்சிக்கு சர்வதேச அளவில் நடந்த பொருளாதார மாற்றங்களே முக்கியக் காரணமாகும். இந்தியாவின் ரிசர்வ் வங்கியைப் போல அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதாலும், வளைகுடா நாடுகளில் நிலவிய போர் பதற்றம் மெல்லத் தணியத் தொடங்கியதாலும் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்துள்ளது.

அத்துடன் சமீபத்தில் நடந்த அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சிக்குச் சாதகமாக அமையாததும் சந்தையில் எதிரொலித்துள்ளது. இதனால் தங்கம் மற்றும் கோல்ட் இடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் அதை விற்றுவிட்டு டாலரில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக ஒரு லட்சத்திற்குக் கீழே வந்த தங்கம் விலை, இனிவரும் நாட்களில் எண்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கோ அல்லது எண்பதாயிரம் ரூபாய்க்கோ கூடச் சரிய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது. இப்படித் தொடர்ந்து விலை சரிந்தால், வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வங்கிகளில் இருந்து நோட்டீஸ் வர அதிக வாய்ப்புள்ளது.

பொதுவாக ஒருவர் வங்கியில் தங்கத்தை அடமானம் வைக்கும்போது, அன்றைய சந்தை மதிப்பில் எண்பத்தைந்து சதவீதம் வரை வங்கிகள் கடன் வழங்குகின்றன.

தங்கம் உச்சத்தில் இருந்தபோது ஒரு கிராமுக்குப் பதினோராயிரம் ரூபாய் வரை கடன் கொடுத்த வங்கிகளுக்கு, இப்போது தங்கத்தின் விலை குறைந்துவிட்டதால் அடமானப் பொருளின் பாதுகாப்பு மதிப்பும் குறைந்துவிடுகிறது.

எனவே, கடன் ஒப்பந்த விதிகளின்படி அந்த வித்தியாசத் தொகையை ஈடுகட்டக் கூடுதல் பணத்தை உடனடியாகக் கட்டச் சொல்லியோ அல்லது கடனின் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்தச் சொல்லியோ வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் சூழல் உருவாகியுள்ளது.

Related News

Latest News