நீத்தா அம்பானி அணிந்திருந்தது சாதாரண புரூச் அல்ல… விலை ரூ.15 கோடி!!

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி, தனது ஆடம்பரமான உடைகள், விலை உயர்ந்த நகைகள் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளின் ஹேண்ட் பேக்குகளால் அடிக்கடி கவனம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் அணிந்திருந்த தட்டான் பூச்சி வடிவிலான சிறிய புரூச் (Brooch) தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் விலையைக் கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள். அதன் மதிப்பு சுமார் ரூ.15 கோடி!

பொதுவாக உடைகளில் குத்தி அணியும் சிறிய அலங்காரப் பின்னைத்தான் புரூச் என்று அழைக்கிறார்கள். சாதாரணமாக சில நூறு ரூபாய்களுக்கு கிடைக்கும் இந்த வகை ஆபரணத்தில், நிதா அம்பானி அணிந்திருந்தது மிகவும் அரிய கலைப்படைப்பாகும்.

மும்பையில் உள்ள நீதா முகேஷ் அம்பானி கல்ச்சுரல் சென்டரில் நடைபெற்ற ‘தி லைப்ரரி’ நிகழ்ச்சியில் நிதா அம்பானி இந்த புரூச்சை அணிந்து வந்தார். ‘சோரிங் ஸ்பிரிட்’ (Soaring Spirit) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆபரணத்தைப் புகழ்பெற்ற சீன கலைஞர் வாலஸ் சான் வடிவமைத்துள்ளார். இதனை முழுமையாக உருவாக்க அவருக்கு சுமார் 10 ஆண்டுகள் தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஏன் இவ்வளவு விலை தெரியுமா?

இந்த புரூச்சின் மையப்பகுதியில் 17.67 காரட் எடையுள்ள சவோரைட் கார்னெட் என்ற அரிய ரத்தினக் கல் பதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றிலும் மஞ்சள் நிற வைரங்கள், மாணிக்கங்கள் மற்றும் இளஞ்சிவப்பு வைரங்கள் அழகாகப் பதிக்கப்பட்டுள்ளன.

மேலும், சாதாரண உலோகங்களைப் பயன்படுத்தாமல் மிகவும் லேசான டைட்டானியம் உலோகத்தால் இந்த புரூச் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் நிதா அம்பானி நடக்கும்போது தட்டான் பூச்சி உண்மையாகவே சிறகடித்து அசைவது போன்ற தோற்றம் கிடைக்கிறது. அவரது தோளில் ஒரு அழகான தட்டான் பூச்சி அமர்ந்திருப்பதைப் போன்ற தத்ரூபமான வடிவமைப்பு இதன் தனிச்சிறப்பாகும்.

இந்த புரூச் சொல்லும் செய்தி என்ன?

தட்டான் பூச்சி தனது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வேகம், திசை மற்றும் இயக்கத்தை மாற்றிக்கொண்டு பறப்பதைப் போல, மனிதர்களும் வாழ்க்கையில் வரும் தடைகளைத் தாண்டி சுதந்திரமாக முன்னேற வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆபரணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு நீத்தா அம்பானி லினன் பேண்ட் சூட் அணிந்து வந்திருந்தார். அவரது இடது தோள்பட்டையில் அலங்கரித்திருந்த ரூ.15 கோடி மதிப்பிலான இந்த தட்டான் பூச்சி புரூச், அவரது ஒட்டுமொத்த தோற்றத்திற்கும் தனி அழகைச் சேர்த்ததுடன் இணையத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

Related News

Latest News