10 ஆண்டுகளில் இல்லாத சரிவு? தங்கம் வாங்குபவர்களுக்குக் காத்திருக்கும் ‘Twist’!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தனது வரலாற்று உச்சத்தில் இருந்து கணிசமாகச் சரிந்து வர்த்தகமாகி வரும் நிலையில், தங்கம் மீண்டும் தனது பழைய உச்சத்தைத் தொட இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என உலகின் முன்னணி நிதி நிறுவனமான ‘கோல்ட்மேன் சாக்ஸ்’ கணித்துள்ளது.

நடப்பு 2026-ஆம் ஆண்டின் ஜனவரி மாத இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 5,600 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டிருந்தது. ஆனால் அதன் பிறகு முப்பது சதவீதத்திற்கும் மேல் விலை சரிந்து, சமீபத்தில் 4,000 டாலருக்குக் கீழேயும் சென்றது.

இந்த ஆண்டு மட்டும் தங்கம் விலை இதுவரை சுமார் பதினொரு சதவீதம் வரை குறைந்துள்ளதால், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வருடாந்திர வீழ்ச்சியை நோக்கித் தங்கம் சென்று கொண்டிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி, கடன் பத்திரங்களின் வருவாய் உயர்வு, வலுவடைந்த அமெரிக்க டாலர் மற்றும் பணவீக்கம் காரணமாக வரும் டிசம்பர் மாதம் அமெரிக்க ஃபெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பே இந்தத் தொடர் சரிவுக்கு முக்கியக் காரணங்களாகும்.

நவம்பர் 16-ஆம் தேதி லீனா தாமஸ் தலைமையிலான கோல்ட்மேன் சாக்ஸ் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கம் எந்தவொரு வட்டியையும் தராது என்பதால், அமெரிக்க வங்கி வட்டியை உயர்த்தும்போது குறுகிய காலத்தில் தங்கம் விலை மேலும் தடுமாற்றத்தைச் சந்திக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்க்கும்போது, வரும் 2027-ஆம் ஆண்டானது தங்கத்தைப் பொறுத்தவரை 2022-ஆம் ஆண்டைப் போலவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வட்டி உயர்வால் தனியார் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கத் தயங்கினாலும், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கிக்குவிப்பதால் விலை மேலும் அதலபாதாளத்திற்குச் செல்லாமல் தடுக்கப்படும்.

மத்திய வங்கிகளின் இந்தத் தொடர் கொள்முதல் காரணமாக, வரும் 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,650 டாலராக மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கும்போது, மேற்கத்திய நாடுகளின் இடிஎஃப் முதலீடுகள் மீண்டும் குவியத் தொடங்கி, வரும் 2028-ஆம் ஆண்டின் இறுதியில்தான் தங்கம் தனது பழைய உச்சமான 5,600 டாலரை மீண்டும் எட்டும் என கோல்ட்மேன் சாக்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Related News

Latest News