அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்திய வல்லுநர்கள் அங்கு நிரந்தரக் குடியுரிமை எனப்படும் கிரீன் கார்டு பெறுவது இனி மிகவும் கடினமாகப் போகிறது.
அதிக ஊதியம் கொண்ட உயர்மட்ட வேலைவாய்ப்புகள் அனைத்தும் அமெரிக்கக் குடிமக்களுக்கே முதலில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு வழங்கும் ‘பெர்ம்’ எனப்படும் நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் நடைமுறையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் மிகக் கடுமையான மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.
சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திட்டத்தில் செய்யப்படும் மிகப்பெரிய மாற்றம் இதுவாகும் என அமெரிக்கத் தொழிலாளர் துறைச் செயலாளர் கீத் சான்டர்லிங் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
இந்திய ஊழியர்கள் அதிகம் விண்ணப்பிக்கும் இபி-2 மற்றும் இபி-3 ஆகிய பிரிவுகளில் கிரீன் கார்டு பெற இந்தச் சான்றிதழ் மிக அவசியமாகும்.
புதிய விதிகளின்படி, ஒரு வெளிநாட்டு ஊழியருக்குக் கிரீன் கார்டு ஸ்பான்சர் செய்வதற்கு முன்பு, அந்த வேலைக்குத் தகுதியான அமெரிக்கர்கள் யாருமே கிடைக்கவில்லை என்பதை நிரூபிக்க, நிறுவனங்கள் தங்களது இணையதளம், வேலைவாய்ப்புத் தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் குறைந்தது தொண்ணூறு நாட்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டும்.
அத்துடன் விண்ணப்பித்த அமெரிக்கர்களை எதற்காக நிராகரித்தோம் என்பதற்கான வலுவான காரணத்தையும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய செக் என்னவென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிறுவனங்கள், அதே பிரிவில் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கிரீன் கார்டு விண்ணப்பிக்கவே முடியாது.
ஒருவேளை விண்ணப்பித்த பிறகு ஆட்குறைப்பு செய்தால், ஐந்து வேலை நாட்களுக்குள் அரசிற்குத் தகவல் தெரிவித்துவிட்டு, பாதிக்கப்பட்ட அமெரிக்க ஊழியர்களுக்கே அந்த வேலையை வழங்கப் பரிசீலிக்க வேண்டும்.
மேலும், தொழில்முறை செவிலியர்கள், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் அறிவியல், கலைத்துறையில் தனித்திறமை கொண்டவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ‘ஷெட்யூல் ஏ’ சலுகையையும் ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2026 நிலவரப்படி இந்தியர்களுக்கான கிரீன் கார்டு காத்திருப்புப் பட்டியல் இன்னும் 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளிலேயே தேங்கி நிற்கும் சூழலில், இந்தப் புதிய விதிமுறை பெரும் சுமையாக மாறியுள்ளது.
நவம்பர் 17 முதல் அறுபது நாட்களுக்குப் பொதுமக்களின் கருத்துக் கேட்கப்பட்ட பிறகே இந்தப் புதிய சட்டம் இறுதி செய்யப்பட்டு அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
