உலக சினிமா ரசிகர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருந்த அந்த மிகப்பெரிய கேள்விக்கு இப்போது அதிகாரப்பூர்வமாக விடை கிடைத்துவிட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘நோ டைம் டூ டை’ திரைப்படத்தோடு நடிகர் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் இருந்து விடைபெற்ற பிறகு, அடுத்த ஏஜென்ட் 007 யார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
ஜோஷ் ஓ’கானர் (Josh O’Connor) மற்றும் காலம் டர்னர் (Callum Turner) ஆகியோரின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இருந்த நிலையில், நாற்பது வயதான பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் (Robert Pattinson) தான் புதிய ஜேம்ஸ் பாண்ட் எனத் திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷான் கானரி (Sean Connery), ஜார்ஜ் லேசன்பி (George Lazenby), ரோஜர் மூர் (Roger Moore), திமோதி டால்டன் (Timothy Dalton), பியர்ஸ் பிராஸ்னன் (Pierce Brosnan) மற்றும் டேனியல் கிரெய்க் (Daniel Craig) ஆகியோரைத் தொடர்ந்து, பிரிட்டனின் இந்தப் புகழ்பெற்ற உளவாளிக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஏழாவது நடிகர் என்ற பெருமையை பேட்டின்சன் பெற்றுள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு சுமார் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களின் முழுப் படைப்பு உரிமையையும் அமேசான் எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியது.
அந்நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாட்டில் உருவாகும் இருபத்தி ஆறாவது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை, பிரபல இயக்குநர் டெனிஸ் வில்லெனுவ்(Denis Villeneuve) இயக்கவுள்ளார்.
‘பீக்கி பிளைண்டர்ஸ்’ தொடரை உருவாக்கிய ஸ்டீவன் நைட் இதற்குத் திரைக்கதை எழுத, எமி பாஸ்கல் மற்றும் டேவிட் ஹேமேன் ஆகியோர் தயாரிக்கின்றனர். ஜேம்ஸ் பாண்டின் அடையாளமான கோட் சூட் அணிந்த பேட்டின்சனின் முதல் லுக் புகைப்படத்தையும் அமேசான் நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் புதிய பொறுப்பு குறித்து 007 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராபர்ட் பேட்டின்சன், சினிமா வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் தனக்குக் கிடைத்திருப்பது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தன் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் மற்றும் தயாரிப்புக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இது தனது கனவு நனவான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார். பேட்டின்சனின் துணிச்சலான நடிப்பும், தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் திறமையும் இந்தக் காலத்திற்கு ஏற்ற சரியான ஜேம்ஸ் பாண்டாக அவரை மாற்றும் எனத் தயாரிப்பாளர்களும், 007-ன் ஆன்மாவோடு புதிய உற்சாகத்தை அவர் கொண்டு வருவார் என இயக்குநரும் பாராட்டியுள்ளனர்.
ஹாரி பாட்டர் (Harry Potter) மற்றும் ட்விலைட் (Twilight)படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற ராபர்ட் பேட்டின்சன், கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘தி பேட்மேன்’ படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்து அசத்தினார்.
சமீபத்தில் 2026-ல் வெளியான ‘தி ஒடிசி’ படத்தில் நடித்திருந்த அவர், வரும் 2028-ஆம் ஆண்டு ‘தி பேட்மேன்’ இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார். ஒரே நேரத்தில் பேட்மேனாகவும், இப்போது உலகின் நம்பர் ஒன் உளவாளியான ஜேம்ஸ் பாண்டாகவும் பேட்டின்சன் அவதாரம் எடுத்திருப்பது ஹாலிவுட் வட்டாரத்தில் பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
