மொத்த விமானத்தையும் ரத்து செய்த ‘அமெரிக்கா’? வரலாற்றிலேயே 3-வது முறை நடந்த சம்பவம்!

அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமானச் சேவைகள் அனைத்தும் திடீரென நிறுத்தப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய தகவல் தொடர்புச் சிக்கல் காரணமாகவே, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமானங்களையும் உடனடியாகத் தரையிலேயே நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டதாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை செயலாளர் சீன் டஃபி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

வானில் பறக்கும் விமானங்களுக்கும் தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களுக்கும் இடையிலான தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டதால், பயணிகளின் பாதுகாப்புக் கருதி இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் பிரச்சனையைச் சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விமானங்கள் நிறுத்தப்பட்டுச் சில மணி நேரங்களுக்குப் பிறகு, விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில சர்வதேச விமானங்கள் மட்டும் புறப்பட அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், அமெரிக்காவின் முக்கியப் பண்டிகையான ‘தேங்க்ஸ்கிவிங்’ விடுமுறைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், எப்போது விமானங்கள் மீண்டும் பறக்கும் என்ற தகவல் இல்லாமல் லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே முடங்கித் தவித்து வருகின்றனர்.

அமெரிக்க வரலாற்றில் நாடு முழுவதும் இப்படி ஒட்டுமொத்தமாக விமானங்கள் நிறுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் போதும், பின்னர் 2023-ஆம் ஆண்டு விமானிகளுக்கான பாதுகாப்புத் தகவல் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறின் போதும் மட்டுமே இதுபோன்று விமானங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டன.

இந்தத் திடீர் முடக்கத்திற்குப் பின்னால் சதிச்செயலோ அல்லது வெளிநாட்டு அச்சுறுத்தலோ இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க்வேன் முல்லின் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார். அதேநேரம், இந்தத் தொழில்நுட்பச் சிக்கலை முழுமையாகச் சரி செய்ய இன்னும் சற்று நேரம் பிடிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இந்தத் திடீர் விமானச் சேவை முடக்கத்தால் ஜெட் புளூ, டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட முன்னணி விமான நிறுவனங்களின் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

Related News

Latest News