2027-ல் தங்கம் விலை ரூ.1.87 லட்சத்தைத் தாண்டும்? நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்ட கணிப்பு!!

தற்போது சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று குறைந்து வருவதைப் பார்த்து முதலீட்டாளர்கள் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.

ஆனால், இந்த விலை சரிவு என்பது மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே என்றும், வரும் 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொடப்போகிறது என்றும் இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தின் செயலாளர் சுரேந்திர மேத்தா வெளியிட்டுள்ள கணிப்பின்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 6,200 டாலராகவும், வெள்ளி விலை 180 டாலராகவும் கிடுகிடுவென உயர வாய்ப்புள்ளது.

இதை இந்திய மதிப்பில் கணக்கிட்டால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் பத்து கிராம் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து எண்பத்தேழாயிரம் ரூபாயைத் தாண்டிச் செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை ஐந்து லட்சத்து நாற்பத்தைந்தாயிரத்து நூறு ரூபாய் வரை எகிறி நிற்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் வரும் டிசம்பர் மாதம் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் என்ன மாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்ற உலகளாவிய எதிர்பார்ப்பு காரணமாகவே, தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தற்காலிகமாகச் சரிவைச் சந்தித்து வருகின்றன.

ஆனால், உலகச் சந்தையில் நடக்கும் மாற்றங்கள் தங்கத்தின் பிரகாசமான எதிர்காலத்தையே காட்டுகின்றன. குறிப்பாகச் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற முக்கிய வர்த்தக மையங்களில், தங்கத்தைச் சேமித்து வைக்கும் பாதுகாப்புப் பெட்டகங்களின் கொள்ளளவு இப்போது பல மடங்கு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில் தங்கத்தின் தேவை மற்றும் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் உயரப்போகிறது என்பது உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே நாடுகள் தங்களது சேமிப்புக் கிடங்குகளை விரிவுபடுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரை, சமீபத்தில் விலை சற்று குறைந்ததைப் பயன்படுத்தி மக்கள் போட்டி போட்டுக்கொண்டு நகைகளை வாங்கிக் குவித்துள்ளனர்.

நடந்து முடிந்த தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 61 முதல் 62 டன் வரையிலான தங்கமும், 330 முதல் 340 டன் வரையிலான வெள்ளியும் விற்பனையாகிப் புதிய சாதனை படைத்துள்ளது.

வரவிருக்கும் திருமண சீசனுக்கான முன்பதிவுகளும் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போதைய விலை குறைவை நீண்ட கால முதலீட்டிற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது என வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News