நகை பிரியர்களுக்குக்கு பேரதிர்ச்சி!! 7 கிராம் நகையில் வெறும் 3.3 கிராம் மட்டுமே ‘தங்கம்’?

நம்மில் பலரும் பல வருடங்களாகப் பழக்கமான நகைக்கடை தானே என்று நம்பி, கண்களை மூடிக்கொண்டு தங்க நகைகளை வாங்கி வைப்போம். அப்படித்தான் ஒரு பெண், தனது பெற்றோர் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு மிகவும் நம்பிக்கையான ஒரு கடையில் வாங்கிய 7 கிராம் எடையுள்ள பழைய தங்க வளையலை, சமீபத்தில் உருக்கிப் பரிசோதித்துள்ளார்.

ஆனால், ஹால்மார்க் தரச்சான்று உள்ள கடையில் அந்த வளையலை உருக்கிப் பார்த்தபோது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. 7 கிராம் எடையுள்ள அந்த வளையலில் வெறும் 3.3 கிராம் மட்டுமே சுத்தமான தங்கம் இருந்துள்ளது.

அதாவது மொத்த எடையில் 47 சதவீதம் மட்டுமே தங்கம் இருந்ததைக் கண்டு அந்தப் பெண் அதிர்ந்து போயிருக்கிறார்.

தனக்கு நடந்த இந்தக் கசப்பான அனுபவத்தை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ள அந்தப் பெண், ஹால்மார்க் முத்திரை இல்லையென்றால் 7 கிராம் நகை என்பது 7 கிராம் தங்கம் ஆகாது என்பதை வலி மிகுந்த பாடமாகக் கற்றுக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

பல வருடங்களுக்கு முன்பு வாங்கியதால் இப்போது அந்தப் பழைய கடைக்காரரைக் குறை சொல்லவும் வழியில்லை என அவர் வருத்தப்பட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், பழைய நகைகள் பெரும்பாலும் கையால் செய்யப்பட்டவை என்பதால், வளையலின் உறுதித்தன்மைக்காகச் செம்பு, வெள்ளி மற்றும் கற்களை அதிக அளவில் கலந்திருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலரோ, பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு நகைக்கடைகளில் இப்படி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது சர்வ சாதாரணமாக நடந்ததாகவும், வெள்ளி நகைகளிலும் இதேபோலத் தாங்கள் ஏமாந்ததாகவும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆபத்து காலத்தில் உதவும் என நினைத்து நாம் சேர்த்து வைக்கும் தங்கத்தில், ஒரு கிராம் குறைந்தால் கூட அது பெருத்த நஷ்டம் என்பதால், நகை வாங்கும்போது அதில் எத்தனை சதவீதம் தங்கம் உள்ளது என்பதற்கான சான்றிதழைக் கேட்டு வாங்க வேண்டும் எனப் பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.

இப்படிப்பட்ட ஏமாற்றங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கவே இந்தியத் தர நிர்ணய அமைப்பான பிஐஎஸ், ஹால்மார்க் முறையைக் கட்டாயமாக்கியுள்ளது.

நாம் வாங்கும் நகையில் பிஐஎஸ் முத்திரை, தங்கத்தின் தூய்மை அளவு மற்றும் ஆறு இலக்கங்கள் கொண்ட ‘HUID’ எனப்படும் தனித்துவ அடையாள எண் ஆகிய மூன்றும் இருக்கிறதா என்பதைக் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.

இந்த ஆறு இலக்க எண்ணை ‘பிஐஎஸ் கேர்’ என்ற செல்போன் செயலியில் பதிவிட்டு, நகையின் அசல் தன்மையை நாமே உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். மேலும், வீட்டில் உள்ள பழைய நகைகளின் தரத்தை அறிய விரும்பினால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க் பரிசோதனை மையங்களுக்குச் சென்று அதன் சுத்தத் தன்மையை உறுதி செய்துகொள்வதே பாதுகாப்பானதாகும்.

Related News

Latest News