மத்திய கிழக்கு பிராந்தியத்தைத் தாண்டி இப்போது தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவுடனும் நேரடி மோதலில் இறங்கியுள்ளது ஈரான். சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அர்ஜென்டினா நாட்டின் கடற்படை மற்றும் விமானப்படையை பயங்கரவாத அமைப்புகளாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தங்களை எதிர்க்கும் நாடுகளுக்கு அதே பாணியில் பதிலடி கொடுக்கும் ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கை, உலக அரங்கில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஈரான் திடீரென அர்ஜென்டினா ராணுவத்தின் மீது இப்படியொரு நடவடிக்கையை எடுக்க முக்கியக் காரணம், கடந்த மார்ச் மாதம் அர்ஜென்டினா அரசு எடுத்த முடிவுதான். ஈரானின் மிக வலிமையான ராணுவப் பிரிவான ‘இஸ்லாமிய புரட்சிகர காவல்படை’ எனப்படும் ஐ.ஆர்.ஜி.சி-யை அர்ஜென்டினா அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது.
கடந்த 1994-ஆம் ஆண்டு அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள யூத சமூக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எண்பத்தைந்து பேர் கொல்லப்பட்டதோடு, நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தியதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஈரானின் புரட்சிகர காவல்படை இருப்பதாகக் குற்றம் சாட்டியே அர்ஜென்டினா அந்த நடவடிக்கையை எடுத்திருந்தது.
தங்களின் ராணுவப் படைகளை எந்தவொரு நாடு தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்தாலும், பதிலுக்கு அந்த நாட்டின் ராணுவத்தையும் அதே பட்டியலில் சேர்த்துப் பழிவாங்கும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டிலேயே ஈரான் ஒரு சிறப்புச் சட்டத்தை இயற்றியிருந்தது.
அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தியே இப்போது அர்ஜென்டினாவின் கடற்படை மற்றும் விமானப்படை மீது ஈரான் இந்தப் பதிலடியைத் தொடுத்துள்ளது.
இதேபோல் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து அரசு ஈரானின் புரட்சிகர காவல்படையைத் தடை செய்ததற்குப் பதிலடியாக, இந்த மாதத் தொடக்கத்தில்தான் இங்கிலாந்தின் உளவு அமைப்பான எம்.ஐ-6 (MI6) மற்றும் அந்நாட்டின் ராயல் கடற்படை, விமானப்படை ஆகியவற்றையும் ஈரான் இதே பட்டியலில் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புவியியல் ரீதியாக வெகு தொலைவில் இருக்கும் அர்ஜென்டினா படைகள் மீது ஈரான் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால், களத்தில் உடனடியாக என்ன மாதிரியான நடைமுறைப் பாதிப்புகள் ஏற்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கூட்டாளிகள் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டால், துளியும் தயங்காமல் எதிர் நடவடிக்கை எடுப்போம் என்ற ஈரானின் பிடிவாதமான ராஜதந்திரப் போக்கையே இந்த நிகழ்வு உலகிற்கு மீண்டும் காட்டியுள்ளது.
