அமெரிக்காவை அலறவைத்த ‘ஈரான்’? நள்ளிரவில் வட்டமிட்ட ஆளில்லா விமானங்கள்!!

பிரிட்டனில் செயல்பட்டு வரும் அமெரிக்க ராணுவத் தளங்களின் வான்வெளியில், அனுமதியற்ற மர்ம ட்ரோன்கள் பறந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆங்கிலியா பகுதியில் உள்ள பிரிட்டனின் ராயல் விமானப்படைக்குச் சொந்தமான ‘லேக்கன்ஹீத்’ தளத்தில் வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்க விமானப்படையின் மிக முக்கியமான 48-வது போர் விமானப் படைப்பிரிவு தங்கியிருக்கும் இந்தத் தளத்திற்கு மேலே மர்ம ட்ரோன்கள் வட்டமிட்டதைத் தொடர்ந்து, பிரிட்டனில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவத் தளங்களும் உடனடியாக உஷார் படுத்தப்பட்டன.

நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தால் பிரிட்டன் அல்லது அமெரிக்க விமானப்படையின் கட்டமைப்புகளுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை. இது குறித்து விளக்கமளித்துள்ள அமெரிக்க விமானப்படை செய்தித் தொடர்பாளர், தங்கள் நாட்டுப் படைவீரர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிய அமெரிக்காவுடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ட்ரோன் ஊடுருவலைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகளுக்கு உச்சபட்சமான ‘டெல்டா’ நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் முதலில் தகவல்கள் பரவின. ஆனால், அத்தகைய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என பிரெஞ்சு ஊடகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. மாறாக, பிரிட்டனில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்களின் பாதுகாப்பு நிலையானது, இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையான ‘சார்லி’ பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் மற்றொரு கூட்டு விமானப்படைத் தளமான ‘ஃபேர்ஃபோர்டு’ தளத்தை நோக்கிச் சந்தேகத்திற்கிடமான வேன்கள் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஈரான் தொடர்புடைய சதித் திட்டம் இருந்தது பின்னர் விசாரணையில் தெரியவந்தது. அடுத்தடுத்து நடக்கும் இத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பிரிட்டனின் விமானப்படைத் தளங்கள் அனைத்தும் முழுப் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவற்றின் பாதுகாப்பிற்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் பிரிட்டன் பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Related News

Latest News