ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக அமெரிக்க அறிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் ஓரளவு தணிந்தாலும் சவுதி அரேபியா – ஹவுதி படைகள் இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது.
ஹவுதி படைகள் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி ஏவிய இரண்டு ஏவுகணைகளையும் வானிலேயே இடைமறித்து அழித்ததாக சவுதி பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ரியாத்தின் பல்வேறு பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர் ஆபத்து நீங்கியதாக அதிகாரிகள் மக்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இதற்குப் பதிலடியாக, யெமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது சவுதி படைகள் தாக்குதல் நடத்தியதாக ஹவுதி ஆதரவு சாபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சவுதி அரேபியாவின் கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய் வழித்தடத்தையும் ஹவுதி படைகள் மீண்டும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலால் ஏற்பட்ட தீ விரைவில் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், எண்ணெய் ஏற்றுமதி தொடர்ந்து நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹார்முஸ் நீரிணை வழியாக வளைகுடா நாடுகளின் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், சவுதி அரேபியாவுக்கு இந்தக் கிழக்கு–மேற்கு குழாய் வழித்தடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மறுபுறம், நவம்பர் 6ஆம் தேதி கெஷ்ம் தீவில் கடைசியாகத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் அமெரிக்கா, அதன் பின்னர் புதிய தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்றாலும், ஹார்முஸ் நீரிணையில் கடற்படை முற்றுகை தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
