அன்பில் மகேஷின் ஜாமின் கனவு தகர்ந்தது!! நவ.16 வரை சிறை… நீதிமன்றம் அதிரடி!! முழு விவரம் இதோ…

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகி அரசக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மூலம் ரூ.400 கோடி வரை முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் அன்பில் மகேஷை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்திய போலீசார், பல்வேறு தகவல்களைச் சேகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஜாமின் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு, லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், அவர் தப்பிச் செல்ல வாய்ப்பில்லை என்றும் வாதிட்டார். மேலும், அரசக்குமார் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பணம் வசூலித்ததாகவும், அதற்கு அன்பில் மகேஷ் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்தியமூர்த்தி, அன்பில் மகேஷின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அவர் நவம்பர் 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related News

Latest News