அமெரிக்க பங்குச்சந்தையில் வரலாறு காணாத ‘பூகம்பம்’! ஒரே டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு விழுந்த பேரிடி!

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் அந்நாட்டு அரசியலை மட்டுமல்லாமல், உலகப் பங்குச் சந்தை வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.

அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி, நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டு முக்கிய அவைகளையும், பல முக்கிய மாகாண ஆளுநர் பதவிகளையும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது.

அமெரிக்காவின் அதிகாரக் கடிவாளம் டிரம்பின் கையை விட்டு நழுவிச் சென்றதால், தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு அமெரிக்கப் பங்குச் சந்தை வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக டிரம்பின் சொந்த நிறுவனங்களும், அவருக்குப் பக்கபலமாக நின்ற தொழிலதிபர்களின் பங்குகளும் பாதாளத்தில் சரிந்து முதலீட்டாளர்களைக் கலங்கடித்துள்ளன.

இதில் மிகப்பெரிய அடியை வாங்கியிருப்பது டிரம்பின் சொந்த நிறுவனமான ‘டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி குரூப்’தான். ஒரே நாளில் சுமார் இருபத்து நான்கரை சதவீதம் வரை சரிந்த இந்நிறுவனத்தின் பங்கு விலை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 175 டாலராக இருந்த நிலையில், தற்போது வெறும் 4.49 டாலராகச் சுருங்கிப் போனது.

அதேபோல் டிரம்பின் கட்சிக்குப் பெரும் நிதியுதவி அளித்த உலகப் பணக்காரர் எலான் மஸ்க்கின் டெஸ்லா பங்குகள் 3.3 சதவீதமும், ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் 3.8 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளன.

இதுமட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ மற்றும் சிப் தயாரிப்பு நிறுவனங்களும் பலத்த அடி வாங்கியுள்ளன. இதன் தாக்கத்தால் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தென் கொரியாவின் கோஸ்பி பங்குச் சந்தையும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

மறுபுறம், போர் பதற்றம் குறையும் என்ற எதிர்பார்ப்பால் ஆயுத ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் சரிந்த நிலையில், பாதுகாப்பான முதலீட்டைத் தேடி மக்கள் ஓடியதால் தங்கத்தின் விலை மீண்டும் ராக்கெட் வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது.

பங்குச் சந்தையின் இந்தக் கோர வீழ்ச்சியால் கடும் ஆத்திரமடைந்த அதிபர் டிரம்ப், தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். பங்குச் சந்தையை வரலாற்று உச்சத்திற்குக் கொண்டு செல்ல தாங்கள் கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகளால் வரலாற்றின் மிக மோசமான நாளைச் சந்தை சந்தித்திருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்தச் சரிவால் அமெரிக்க மக்களின் ஓய்வூதிய சேமிப்பு நிதியான 401(k) மதிப்பும் கரைந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப், இந்தப் பொருளாதாரப் பேரழிவிற்குக் குடியரசுக் கட்சி காரணமல்ல, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர்தான் முழுக் காரணம் எனக் காட்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் ஒற்றைத் தேர்தல் முடிவு, உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பைக் கரைத்துத் தங்கத்தின் விலையை உச்சத்திற்குக் கொண்டு சென்றிருப்பது சர்வதேச வர்த்தக உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News