ஈரானில் எஞ்சியிருக்கும் பகுதிகளையும் முற்றிலுமாக அழித்துவிடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டலுக்கு மத்தியில், சர்வதேச அரசியலையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் ஒரு அதிரடி அணுசக்தி வரைவுத் திட்டத்தை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது ஈரான்.
கத்தார் நாட்டின் மத்தியஸ்தம் மூலமாக வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த ரகசியத் திட்டத்தில், ஈரான் முன்வைத்துள்ள ஏழு கறாரான நிபந்தனைகளை அமெரிக்கா முதலில் நிறைவேற்றினால் மட்டுமே, அணுசக்தி விவகாரம் குறித்த பேச்சுவார்த்தையே தொடங்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் இந்த ஏழு நிபந்தனைகளையும் அமெரிக்கா செயல்படுத்தாத வரை, உலக வர்த்தகத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கவும் மாட்டோம், சமரசப் பேச்சுவார்த்தைக்கு வரவும் மாட்டோம் என ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் ரெசாயி நேரடியாக எச்சரித்துள்ளார்.
ஈரான் விதித்துள்ள அந்த ஏழு நிபந்தனைகள் என்னென்ன என்பது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
அதன்படி, லெபனான் உட்படப் பிராந்தியம் முழுவதும் நடக்கும் அனைத்துப் போர் நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்; ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கக் கடற்படை விதித்துள்ள முற்றுகையை விலக்கிக்கொள்ள வேண்டும்; ஈரான் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும்;
வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும்; மத்திய கிழக்கு பிராந்தியத்தில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்;
ஈரான் மண்ணின் மீதான தாக்குதல்களை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட பேரழிவுகளுக்கு அமெரிக்கா முறையான போர் இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய ஏழு அதிரடி கோரிக்கைகளை ஈரான் பட்டியலிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி இருபத்தெட்டாம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து, லெபனான், ஏமன், சவுதி அரேபியா என ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் போர்க்களமாக மாறியுள்ளது.
அமெரிக்க இடைத்தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், அதிபர் ட்ரம்ப் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதலைத் தொடங்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அணுசக்தி விவகாரத்தை முதலில் பேச வேண்டும் என அமெரிக்கா பிடிவாதம் பிடிக்கும் சூழலில், போர் இழப்பீடு கேட்ட கையோடு ஈரான் அனுப்பியுள்ள இந்த ஏழு நிபந்தனைகளை வாஷிங்டன் தற்போது தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
ஈரானின் இந்தத் துணிச்சலான நிபந்தனைகளுக்கு அதிபர் ட்ரம்ப் பணிவாரா அல்லது மீண்டும் போர் வெடிக்குமா என்பதை உலக நாடுகள் பதைபதைப்புடன் கவனித்து வருகின்றன.
