‘ஈரானால் எல்லாமே போச்சு’.. டிரம்பை கைவிடும் சொந்தக் கட்சியினர்?

அமெரிக்க இடைத்தேர்தலில் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி சந்தித்த வரலாறு காணாத படுதோல்வி, இப்போது அக்கட்சிக்குள்ளேயே ஒரு மாபெரும் உள்நாட்டுப் போரைத் தொடங்கி வைத்துள்ளது.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையில் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி 2008-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, செனட் சபையையும் தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சித் தோல்வியைத் தொடர்ந்து, வரும் 2028-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலைக் குறிவைத்து, டிரம்பின் மிக நெருங்கிய தளபதிகளே இப்போது அவருக்கு எதிராகத் திரும்பித் தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக்கொள்ளத் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இந்த உட்கட்சிப் பூசலின் முதல் வெடியைப் பற்றவைத்தவர் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்தான். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ஈரான் போர், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு மற்றும் இஸ்ரேலுக்கு வாரி வழங்கப்படும் பில்லியன் கணக்கான நிதியுதவிகளால் மக்கள் அடைந்த கோபமே தங்கள் தோல்விக்கு முழுக் காரணம் என அவர் பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார்.

அதிருப்தியடைந்த டிரம்ப் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்துத் தனக்கென ஒரு புதிய கூட்டணியை உருவாக்கும் வேலையிலும் அவர் இறங்கியுள்ளார். இதேபோல் செனட்டர் டெட் குரூஸும் ஈரான் போரை இழுத்தடித்ததே தோல்விக்குக் காரணம் எனச் சாடியுள்ளார்.

மறுபுறம் புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ், இந்தத் தேர்தல் தோல்வியைக் கட்சியின் அழிவுக்காலம் என்று வர்ணித்துள்ளதோடு, எப்ஸ்டீன் ரகசிய ஆவணங்களை வெளியிடாமல் தடுத்த சொந்தக் கட்சி எம்.பி-க்களையும் கடுமையாக விளாசியுள்ளார்.

தலைவர்களின் இந்தக் கலகத்திற்கு மத்தியில், டிரம்பின் அமைச்சரவையிலும் அடுத்தடுத்து ராஜினாமா புயல் வீசத் தொடங்கியுள்ளது. வரும் 2028 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தனது பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

டிரம்ப் நிர்வாகத்தோடு தொடர்ந்து நீடிப்பது தனது அதிபர் கனவுக்குப் பாதகமாக முடியும் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்; இருப்பினும் ரூபியோ இந்தத் தகவலைத் தற்போதைக்கு மறுத்துள்ளார்.

இதற்கிடையில், ஈரான் போருக்குள் டிரம்பை வலுக்கட்டாயமாக இழுத்துவிட்டதாகவும், மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்கத் தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்களையும் வீரர்களின் உயிரிழப்புகளையும் மறைத்ததாகவும் கூறி, பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத்தை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சொந்தக் கட்சியினரே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

டிரம்ப் அவரைக் காப்பாற்ற நினைத்தாலும், கட்சிக்குள் அவருக்கு எதிரான அழுத்தம் உச்சத்தை எட்டியுள்ளது. மொத்தத்தில், இத்தனை காலம் டிரம்ப் என்ற ஒற்றை மனிதரைச் சுற்றி நின்ற குடியரசுக் கட்சியின் இரும்புக் கோட்டை இப்போது சுக்குநூறாக உடைந்து கொண்டிருக்கிறது.

Related News

Latest News