உலகையே ஆட்டிப்படைத்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மனித குலத்திற்கு வரப்போகும் பேராபத்துகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்க தங்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும் என, கூகுள் நிறுவனத்தின் ஏஐ பிரிவு ஊழியர்களே போர்க்கொடி தூக்கியிருப்பது சர்வதேச தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள கூகுள் டீப்மைண்ட் நிறுவனத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள், தாங்கள் வேலையை விட்டு நின்ற பிறகும் கூட வாழ்நாள் முழுவதும் நிறுவனத்தைப் பற்றி எந்தவொரு விமர்சனமும் செய்யக்கூடாது எனப் போடப்பட்டுள்ள கடுமையான ஒப்பந்த விதிகளில் இருந்து தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் டீப்மைண்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சோபியா லிகோரி (Sofia Liguori) என்பவர், ராணுவப் பயன்பாட்டிற்காக கூகுள் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு எதிராகத் தடையை மீறி பிபிசி ஊடகத்தில் பகிரங்கமாகப் பேசிய பிறகே இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இதனைத் தொடர்ந்து தற்போதைய ஊழியர்கள் தங்களது பணி ஒப்பந்தங்களை ஆய்வு செய்தபோது, வாழ்நாள் முழுவதும் நிறுவனத்திற்கு எதிராக வாயைத் திறக்கக்கூடாது என்ற நிபந்தனை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இங்கிலாந்து சட்டப்படி பொதுநலனுக்காக உண்மையைப் பேசுபவர்களுக்குப் பாதுகாப்பு இருந்தாலும், ஊழியர்களை அச்சுறுத்தி மவுனமாக்கவே கூகுள் இத்தகைய விதிகளைப் பயன்படுத்துவதாகக் கூறி, நிறுவனத்தின் உள் அரட்டைத் தளத்தில் ‘1984’ என்ற சர்வாதிகார நாவலைக் குறிப்பிட்டு ஊழியர்கள் தங்களின் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
ஏஐ என்பது சாதாரண ஒரு தொழில்நுட்பம் கிடையாது என்றும், அது மனித குலத்தின் எதிர்காலத்தையும் உலக ஜனநாயகத்தையும் அடியோடு மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என்றும் அந்த ஊழியர்கள் எச்சரிக்கின்றனர்.
மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் ஆபத்துகள் குறித்துத் தெரிந்துகொள்ளும் முழு உரிமை சாமானிய மக்களுக்கு இருக்கிறது என்றும், உள்ளே வேலை செய்யும் நாங்கள் வெளியே சொன்னால் மட்டுமே அந்த உண்மைகள் உலகிற்குத் தெரியவரும் என்றும் அவர்கள் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்களின் இந்தக் கொந்தளிப்பைத் தொடர்ந்து விளக்கமளித்துள்ள கூகுள் நிர்வாகம், பாதுகாப்பு குறித்த வெளிப்படையான விவாதங்களைத் தாங்கள் எப்போதும் ஊக்குவிப்பதாகவும், புதிதாகப் பணியில் சேருபவர்களுக்கு இந்த வாழ்நாள் தடை விதியை நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால், புதியவர்களுக்கு மட்டுமல்லாமல் தற்போது பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் ஒப்பந்தங்களில் இருந்தும் இந்த வாய்ப்பூட்டு சரத்தை முழுமையாக நீக்க வேண்டும் என ஊழியர்கள் உறுதியாக வலியுறுத்தி வருகின்றனர். ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கும் விஞ்ஞானிகளே அதன் ஆபத்து குறித்து உலகிற்கு எச்சரிக்கத் துடிக்கும் இந்தச் சம்பவம், எதிர்கால தொழில்நுட்ப உலகம் எதை நோக்கிச் செல்கிறது என்ற பெரும் கேள்வியை நம் முன் எழுப்பியுள்ளது.
