இந்தியாவுடனான வர்த்தகத்தை முறித்துக் கொண்டதால் பாகிஸ்தான் நாட்டிற்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் நாற்பது பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.3.78 லட்சம் கோடி ரூபாய்!
கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடனான நேரடி வர்த்தகத்தை நிறுத்தியதால், பாகிஸ்தான் சந்தித்துள்ள இந்த வரலாற்று காணாத பொருளாதாரப் பேரழிவு குறித்த பகீர் புள்ளிவிவரங்களை அந்நாட்டின் தொழில்துறை தலைவர்களே இப்போது பொதுவெளியில் போட்டு உடைத்துள்ளனர்.
அண்டை நாடான இந்தியாவுடன் உடனடியாக மீண்டும் வர்த்தக உறவைத் தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தான்-இந்தியா வர்த்தக கவுன்சில் தலைவர் நூர் முகமது கசூரி விடுத்துள்ள வெளிப்படையான கோரிக்கை சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவுடனான வர்த்தகம் தடைபட்டதன் விளைவாக, அன்றாட அத்தியாவசியப் பொருட்களையும் மூலப்பொருட்களையும் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடுகளிலிருந்து அதிக சரக்குக் கட்டணம் செலுத்தி வாங்க வேண்டிய அவல நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.
குறிப்பாக, இந்தியாவின் மருந்து மூலப்பொருட்கள் கிடைக்காததால் அந்நாட்டு மருத்துவத் துறைக்கு ஆண்டுதோறும் இரண்டு முதல் மூன்று பில்லியன் டாலர் வரை கூடுதல் செலவாகியுள்ளது. அதேபோல் பாகிஸ்தானின் முதுகெலும்பாக விளங்கும் ஜவுளித் தொழிலுக்குத் தேவையான பருத்தியை பிரேசில், எகிப்து, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற தொலைதூர நாடுகளிலிருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ததால் மட்டுமே சுமார் ஐந்து பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சர்க்கரை, உரம், சிமெண்ட், இரும்பு, காய்கறிகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் வரை அனைத்தும் அருகிலேயே மிகக் குறைந்த செலவில் இந்தியாவிலிருந்து கிடைக்க வாய்ப்பிருந்தும், பிடிவாதத்தால் தூரத்து நாடுகளை நாடி பாகிஸ்தான் தன் பொருளாதாரத்தைத் தானே சீரழித்துக் கொண்டது அம்பலமாகியுள்ளது.
அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை பொருளாதாரத்தோடு முடிச்சுப் போட்டு சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்தக் கூடாது என பாகிஸ்தான் வணிக அமைப்புகள் அந்நாட்டு அரசை எச்சரித்துள்ளன.
கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா பெருமளவில் உதவி செய்து கைதூக்கி விட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள வர்த்தக கவுன்சில், எல்லைகளைத் திறந்து வர்த்தகத்தைத் தொடங்கினால் மட்டுமே பாகிஸ்தானில் உள்ள வரலாற்று மற்றும் ஆன்மீகத் தலங்களுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து அன்னியச் செலாவணி பெருகும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
வெற்றுப் பகையை வளர்த்து பல லட்சம் கோடிகளை இழந்துவிட்டு, இப்போது இந்தியாவுடன் வர்த்தகம் செய்யத் துடிக்கும் பாகிஸ்தானின் இந்த எதார்த்தப் புலம்பல் உலக நாடுகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
