மு.க.ஸ்டாலினுக்கு வந்த பெரிய ‘சிக்கல்’! அடுத்தடுத்து குவியும் அதிரடி ‘புகார்’!

தமிழக அரசியல் களம் தற்போது தாராபுரம் தேர்தல் பிரச்சாரத்தின் எதிரொலியால் அதிரத் தொடங்கியிருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமாவை விமர்சித்து பேசிய கருத்துக்கள், இப்போது ‘உருவக்கேலி’ என்ற மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

கடந்த 2-ம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், வேட்பாளர் சத்தியபாமாவை ‘பெட்டி பாமா’ மற்றும் ‘பல்டி பாமா’ என்று கிண்டல் செய்ததோடு, “எப்படித்தான் அந்த உருவத்தை வைத்துக்கொண்டு இப்படிப் பல்டி அடித்தாரோ தெரியவில்லை” என்று அவரது உடல் தோற்றத்தைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஆளும் கட்சியான தவெக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஒரு பெண் வேட்பாளரை அவரது அரசியல் செயல்பாடுகளுக்காக விமர்சிப்பதைத் தாண்டி, அவரது உடல் அமைப்பை வைத்து பொதுமேடையில் விமர்சிப்பது நாகரிகமான அரசியல் அல்ல என்று தவெக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது காவல்துறையிலும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பாயத் தொடங்கியுள்ளன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி, தவெக தரப்பில் மாநில டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டத்திலும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. திருச்சியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தவெக மகளிர் அணியினர் திரண்டு சென்று, மு.க.ஸ்டாலினுக்கு எதிராகப் புகார்களை அளித்து வருகின்றனர்.

ஒரு பெண்ணைத் தரக்குறைவாகவும், உருவக்கேலி செய்யும் வகையிலும் பேசிய அவர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஒரு கட்சியின் தலைவரே சக வேட்பாளரை உருவக்கேலி செய்ததாக எழுந்துள்ள இந்தப் புகார், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்தப் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், இது பெண்களின் கண்ணியத்தைப் பாதிக்கும் செயல் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது தவெக மகளிர் அணியினர் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில், போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் என்ன மாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்பதைத் தான் ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Related News

Latest News