தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் புதிய தளர்வு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் தகுதியான குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் முக்கியமான நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.
புதிய விதிமுறையின்படி, தமிழ்நாட்டில் பிறந்து திருமணத்துக்குப் பிறகு கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் வசிக்கும் பெண்கள், பிரசவத்திற்காக தமிழ்நாட்டுக்கு வந்து அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தாலும், அவர்களின் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இதற்கு, குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் பிறந்தவராக இருக்க வேண்டும். மேலும், குழந்தையின் தாய்வழி தாத்தா, பாட்டி இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருக்க வேண்டும். இதனை நிரூபிக்கும் உரிய இருப்பிடச் சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். குழந்தை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்திருக்க வேண்டும்.
காரைக்குடியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, திருமணத்துக்குப் பிறகு மைசூரில் வசித்த நிலையில், பிரசவத்திற்காக காரைக்குடி வந்து செப்டம்பர் 17, 2026 அன்று அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். அவரது குடும்பச் சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த விதிமுறை தளர்வு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திருத்தம் 2026 ஜூன் 22 முதல் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும். தகுதியுடைய குடும்பங்கள் உரிய ஆவணங்களுடன் திட்டத்தின் பலனைப் பெறலாம்.
முக்கியமாக, வெளிமாநிலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த சலுகை கிடையாது. குழந்தை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்திருக்க வேண்டும்.
