வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை வீசி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சனிக்கிழமை அதிகாலை, வடகொரியா தனது கிழக்கு கடற்கரை பகுதியை நோக்கி மர்மமான ஆயுதம் ஒன்றை ஏவியுள்ளதாக தென்கொரிய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதை வெறும் ப்ராஜெக்டைல் (Projectile) என்று தென்கொரியா சாதாரணமாகக் கூறினாலும், ஜப்பான் அரசு இது ஒரு ‘பாலிஸ்டிக் ஏவுகணையாக’ இருக்கலாம் என சந்தேகித்து உடனடியாக தனது நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.8/ வடகொரியாவின் இந்தத் திடீர் ராணுவ நடவடிக்கையால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.இந்தத் திடீர் தாக்குதலுக்கு இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவும் எல்லைப் பிரச்சனைதான் முக்கியக் காரணமாகும். சமீபத்தில் இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், வடகொரியா ரகசியமாகப் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகள் வெடித்து மூன்று தென்கொரிய ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்திற்கு வடகொரியா உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், எல்லைகளில் ஆயுதங்களைக் குவிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் தென்கொரியாவும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் படையும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வந்தன.
ஆனால், தென்கொரியாவின் இந்தக் கோரிக்கையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியான ‘கிம் யோ ஜாங்’ மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மன்னிப்பு கேட்பதெல்லாம் ஒருபோதும் நடக்காது என்று கூறிய அவர், தென்கொரியாவின் கோரிக்கை மிகவும் பரிதாபமாக இருக்கிறது என வெளிப்படையாகக் கிண்டல் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, தென்கொரியாவுடனான அனைத்து உறவுகளையும் நிரந்தரமாகத் துண்டிக்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இதற்கேற்ப வடகொரியா தனது எல்லைகளில் புதிய கண்ணிவெடிகள் மற்றும் டாங்கி எதிர்ப்புத் தடைகளை அமைத்து போருக்கான ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
கடந்த சில வாரங்களாகவே புதிய போர்க்கப்பல்கள் மற்றும் அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வடகொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. உலகிலேயே அதிக ராணுவப் பாதுகாப்பு நிறைந்த இந்த எல்லையில் தற்போது நடக்கும் மோதல்கள், மாபெரும் போர் மூளுவதற்கான அபாயத்தை அதிகரித்துள்ளது.
