அமெரிக்காவை அலறவைத்த ‘சீனா’! இணையத்தில் நடந்த மிகப்பெரிய உளவுப் போர்?

உலகையே ஆட்டிப்படைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையே தங்களுக்கு சாதகமாக மாற்ற சீனா ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் போரைத் தொடங்கியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அமெரிக்காவின் மிக முக்கிய ரகசியங்களை திருட, சீன ஹேக்கர்கள் அரங்கேற்றியுள்ள இந்த பகீர் சம்பவம் தற்போது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

புரூஃப்பாய்ண்ட் ( Proofpoint, Inc.) என்ற முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் அறிக்கையில் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன. அமெரிக்கா மற்றும் சீனாவின் இடையே ஏ.ஐ தொழில்நுட்பப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் அமெரிக்காவின் முன்னணி நிபுணர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து மாபெரும் சைபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளை மாளிகையின் முன்னாள் அதிகாரியான லின் பார்க்கர் உள்ளிட்ட பல முக்கிய நிபுணர்களின் பெயர்களில் போலியான மின்னஞ்சல்களை உருவாக்கி, அதன் மூலம் அதிகாரிகளின் ரகசிய பாஸ்வேர்டுகளை திருடும் துணிகர முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

இவர்களது முக்கிய இலக்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்கள் அல்ல; மாறாக அதற்கான சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் வடிவமைக்கும் மிக முக்கிய அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் தான். அமெரிக்க மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் என மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துக்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே இந்த வலை விரிக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ தொடர்பான புதிய ஆராய்ச்சிகளில் இணைந்து செயல்பட அழைப்பு விடுப்பது போல் ஆசை வார்த்தை கூறி, அவர்களின் ரகசிய தரவுகளை திருட இந்த ஹேக்கிங் குழு திட்டமிட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, இந்த மின்னஞ்சல்களில் இருந்த சில சந்தேகத்திற்குரிய வார்த்தைகளால் உஷாரான அதிகாரிகள், இது ஒரு மாபெரும் ஹேக்கிங் சதி என்பதை கண்டறிந்து உஷாராகினர். தங்கள் மீதான இந்த குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்தாலும், இந்த சம்பவம் ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் பனிப்போரின் ஆரம்பமாகவே பார்க்கப்படுகிறது. வருங்கால உலகை ஆளப்போகும் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் கடிவாளத்தை தங்கள் கைகளில் வைத்திருக்க, வல்லரசு நாடுகள் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காது என்பதையே இந்த இணையவழி ஊடுருவல் அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது.

Related News

Latest News