ஒரே மணி நேரத்தில் 5 லட்சம் கோடி ‘காலி’! பங்குச்சந்தையில் மாபெரும் ‘சரிவு’ ஏன்?

இந்தியப் பங்குச்சந்தையில் வரலாறு காணாத மாபெரும் வீழ்ச்சி! திங்கட்கிழமை காலையில் வர்த்தகம் தொடங்கிய ஒரே மணிநேரத்தில், இந்திய முதலீட்டாளர்கள் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இழந்து தவித்து வருகின்றனர். இந்தத் திடீர் அதிரடி சரிவிற்கான 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா?

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 900 புள்ளிகள் சரிந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 23 ஆயிரம் என்ற அளவிற்குக் கீழ் சரிந்து வர்த்தகமானது. இந்தத் திடீர் சரிவிற்கு முக்கியக் காரணம், சர்வதேச அளவில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைதான். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்று வரும் போர் பதற்றத்தால், கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு நூறு டாலரைத் தாண்டி விற்கப்படுகிறது. இந்தியா தனது தேவைக்கான எண்ணெய்யை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது என்பதால், இந்த விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் மாபெரும் பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது மிக முக்கியக் காரணம், அமெரிக்க அரசு பத்திரங்களின் லாப விகிதம் பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. பங்குச்சந்தைகளில் உள்ள ரிஸ்க்கைக் குறைக்க விரும்பும் உலகளாவிய முதலீட்டாளர்கள், தற்போது பாதுகாப்பான அமெரிக்க அரசுப் பத்திரங்களை நோக்கித் தங்களின் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் விளைவாக, இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தைத் தொடர்ந்து வெளியே எடுத்து வருகின்றனர். இதுவே இந்தியப் பங்குச்சந்தையின் மாபெரும் சரிவிற்கான மூன்றாவது முக்கியக் காரணமாகும்.

நான்காவது காரணம், இந்தியப் பங்குச்சந்தையில் அதிக வெயிட்டேஜ் (Weightage) கொண்ட முன்னணி வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த பங்குகள் இன்று மிகப்பெரிய அளவில் சரிவைச் சந்தித்தன. இந்த நிறுவனங்களின் பங்குகள் ஆட்டம் காணும்போது, அது ஒட்டுமொத்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளையும் சேர்த்துப் படுபாதாளத்திற்கு இழுத்துச் சென்றுவிடுகிறது.

ஐந்தாவது காரணம், உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றம். இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா என மத்திய கிழக்கு நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போர் அபாயத்தால், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் பெரும் பீதியில் உள்ளனர். கடந்த ஏழு வாரங்களாகவே இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில், இந்த ஐந்து சர்வதேச மற்றும் உள்நாட்டுக் காரணங்களின் கூட்டு விளைவே, இன்று இந்திய முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் மாபெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News