கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை, தான் படித்த ஐஐடி காரக்பூர் (IIT Kharagpur) கல்வி நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவையொட்டி ஒரு நெகிழ்ச்சியான வீடியோ செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
அதில் தனது கல்லூரி கால ‘மலரும் நினைவுகளை’ பகிர்ந்து கொண்ட அவர், “இந்த வளாகம் தான் எனது வாழ்க்கைப் பாதையையே மாற்றியமைத்தது” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு சாதாரண மாணவராகத் தொடங்கி இன்று உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கூகுள் நிறுவனத்தின் உச்சத்திற்குச் சென்ற அவரது பயணத்தில், இந்தக் கல்வி நிறுவனம் எவ்வளவு முக்கியப் பங்கு வகித்தது என்பதை அவர் பட்டியலிட்டுள்ளார்.
குறிப்பாக, தனது மனைவி அஞ்சலியை முதன்முதலில் சந்தித்தது இதே ஐஐடி காரக்பூர் வளாகத்தில்தான் என்பதைச் சுந்தர் பிச்சை மிகவும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். “இந்த வளாகத்தில்தான் நான் முதன்முதலில் புரோகிராமிங் கற்றுக்கொண்டேன்.
கையிலே பிளாப்பி டிஸ்க்குகளைச் (Floppy Disk) சுமந்து கொண்டு, அங்கிருந்த கணினிகளைப் பயன்படுத்தக் கிடைத்த அந்த முதல் வாய்ப்புகள் தான் என்னை கூகுள் வரை கொண்டு வந்தன.
பி-308 அறையில் நண்பர்களுடன் விடிய விடியப் படித்தது, ஹாரிஸ் மெஸ்ஸில் சாப்பிட்டது மற்றும் ‘இல்லு’ திருவிழாக் கொண்டாட்டங்கள் என அத்தனை நினைவுகளும் இப்போதும் பசுமையாக உள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய மாணவர்கள் இப்போது உலகம் வியக்கும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருவதாகவும், வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு அதாவது ஏஐ (AI) தொழில்நுட்பம் என்பது வெறும் ஆய்வகங்களோடு நின்றுவிடாமல், சாதாரண மக்களின் கைகளுக்குச் செல்லும் என்றும் அவர் கணித்துள்ளார்.
குறிப்பாக மருத்துவர்கள், விவசாயிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சிறு குறு தொழிலதிபர்கள் என அனைவரும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தங்களின் வேலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்பதே சுந்தர் பிச்சையின் 5 ஆண்டுகால தொலைநோக்குப் பார்வையாக உள்ளது.
அண்மையில் டெல்லியில் சந்தித்த இந்திய மாணவர்களின் ஆர்வத்தையும், தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற அவர்களின் துடிப்பையும் பார்த்துத் தான் வியந்து போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிறந்த கல்வி நிறுவனம் எப்படி ஒரு மனிதனின் கனவுகளுக்குச் சிறகுகளைக் கொடுக்கிறது என்பதற்குச் சுந்தர் பிச்சையின் இந்த உணர்ச்சிகரமான உரையே ஒரு மிகச்சிறந்த சாட்சி.
இந்தியாவின் புதிய தலைமுறை இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தையே மாற்றி அமைப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவர் தனது உரையை நிறைவு செய்துள்ளார்.
