தமிழக சட்டமன்றத்தில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது மீனவர்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கடலில் மீன்பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூ.350-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.10,500-ல் இருந்து ரூ.18,000 ஆக அதிகரிக்கிறது.
அதேபோல், அண்டை நாட்டினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகையும் ரூ.500-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்படும். மீனவர்கள் தாயகம் திரும்பும் வரை இந்த உதவி வழங்கப்படும்.
கடல் மீன்வளத்தை பெருக்கும் நோக்கில் கடலோர மாவட்டங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும். மேலும், மிதவை கூண்டு மீன் வளர்ப்புக்கு மானிய உதவி வழங்கப்படும். திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகத்தில் அதிநவீன மீன் சந்தை அமைக்கப்படுவதுடன், சென்னையில் சர்வதேச கடல் உணவுக் கண்காட்சி மற்றும் சமையல் திருவிழாவும் நடத்தப்பட உள்ளது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு, மீட்க முடியாத படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.86 கோடி நிவாரண உதவி வழங்கப்படும்.
மேலும், பால்வளத்துறையில் ரூ.10 கோடி மதிப்பில் ஜெர்சி கலப்பின கன்றுகளின் பால் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். 50,000 கறவை மாடுகளுக்கான இனவிருத்தி மேலாண்மை பணிகளும் செயல்படுத்தப்பட உள்ளன. பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், 5,000 பேருக்கு பசுந்தீவன விதைகளும் வழங்கப்படும்.
