உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் ஒரே ஒரு கிளிக்கில் காணாமல் போக வாய்ப்புள்ளது. இப்போது சைபர் திருடர்கள் புதிய பாணியில் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.
முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, அதன் மூலம் உங்கள் போனைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதுதான் இவர்களின் புதிய தந்திரம்.
இது குறித்து இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) இப்போது ஒரு பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பொதுவாக ஏதேனும் ஒரு வீடியோ விளம்பரத்தை நீங்கள் கிளிக் செய்யும்போது, அது உங்களை ஒரு வெளி இணையதளத்திற்கு அழைத்துச் செல்லும்.
அங்கே அந்த வீடியோவைப் பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட செயலியைப் பதிவிறக்கம் செய்யச் சொல்லும். ‘நைட் ப்ளே’ (Night Play), ‘ரிலூப்’ (Reloop), ‘கிஸ்’ (Kyss) போன்ற பெயர்களில் வர்ற இந்த ஆப்ஸ்கள் பார்க்கச் சாதாரணமாகத் தெரிந்தாலும், அவை உண்மையில் உங்கள் பணத்தைத் திருட உருவாக்கப்பட்ட ஆபத்தான மென்பொருட்கள்.
இவை கூகுள் பிளே ஸ்டோரில் இருக்காது, மாறாக ஏபிடிகே (APK) கோப்புகளாக உங்கள் போனில் நுழையும். இந்த ஆப்ஸ்கள் இன்ஸ்டால் ஆனவுடன், உங்கள் போனில் உள்ள ‘அக்சஸபிலிட்டி சர்வீசஸ்’ (Accessibility Services) என்ற அனுமதியைக் கேட்கும். ஒருமுறை நீங்கள் இதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டால், உங்கள் போன் உங்கள் பேச்சைக் கேட்காது.
ஹேக்கர்கள் அங்கிருந்தே உங்கள் திரையில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முடியும், உங்கள் வங்கிச் செயலிகளைத் திறக்க முடியும், மிக முக்கியமாக உங்களுக்கு வரும் ஓடிபி (OTP) செய்திகளை உங்களை விட வேகமாக அவர்களால் படிக்க முடியும்.
இந்தியர்களின் இரண்டு முக்கியப் பலவீனங்களைத்தான் இந்தத் திருடர்கள் குறிவைக்கிறார்கள். ஒன்று, ‘இலவசமாக’ கிடைக்கிறது என்ற ஆசை; இன்னொன்று, எதையுமே படிக்காமல் ‘Allow’ பட்டனை அழுத்துவது.
உங்கள் போன் உங்களுக்கே தெரியாமல் தானாக இயங்குவது போன்றோ அல்லது திரையில் அறிமுகமில்லாத விபிஎன் (VPN) குறியீடு தெரிந்தாலோ, உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பிளே ஸ்டோரில் இல்லாத எந்த ஒரு செயலையும் உங்கள் போனுக்குள் அனுமதிக்காதீர்கள்.
ஒருவேளை நீங்கள் இது போன்ற மோசடியில் சிக்கிப் பணத்தை இழந்திருந்தால், ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் எவ்வளவு வேகமாகப் புகார் அளிக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் உங்கள் பணத்தை மீட்க வாய்ப்பு உள்ளது. தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்க்குகளைத் தவிர்ப்பதும், அவ்வப்போது உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளைச் சரிபார்ப்பதுமே உங்களின் உழைப்பைப் பாதுகாக்கும் சிறந்த வழியாகும்.
