அமெரிக்காவுக்கு விழுந்த அடுத்த ‘பேரிடி’! வானில் வெடித்துச் சிதறிய ‘F-16’ போர் விமானம்!

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான F-16 போர் விமானம், திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஜெர்மனியில் அமைந்துள்ள அமெரிக்காவின் ‘ஸ்பாங்டாலெம்’ (Spangdahlem Air Base) விமானப்படைத் தளத்தில், செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் இரண்டரை மணியளவில் இந்த அதிர்ச்சியான விபத்து அரங்கேறியுள்ளது.

வானில் பறந்துகொண்டிருந்த அந்த அதிநவீன F-16 போர் விமானம், கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரச் சத்தத்துடன் தரையில் மோதி வெடித்துச் சிதறியுள்ளது.

விமானம் தரையில் மோதுவதற்குச் சில வினாடிகளுக்கு முன்பாக, அதிலிருந்த பைலட் பாராசூட் மூலம் குதித்ததால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்று, காயங்களுடன் இருந்த அந்த பைலட்டை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பல அதிநவீன போர் விமானங்கள் ஒன்றிணைந்து வானில் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதுதான் இந்த விபத்து நேர்ந்துள்ளது என ஜெர்மன் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, அந்தப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மற்ற அனைத்து போர் விமானங்களும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் எனப் பல நூறு பேர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி அங்கு முழுமையான மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அந்த பைலட்டைத் தவிர வேறு யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் நிம்மதி தெரிவித்துள்ளது.

மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படும் அமெரிக்க விமானப்படையின் ஐம்பத்தி இரண்டாவது பிரிவுக்குச் சொந்தமான இந்த அதிநவீன போர் விமானம், நடுவானில் எப்படித் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்தது? என்பது குறித்து அமெரிக்க மற்றும் ஜெர்மன் ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரே இந்த விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும்.

Related News

Latest News