அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஆறு மாதங்களாக நீடித்து வரும் போர், இப்போது ஒரு மிகக் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற கட்டத்தை எட்டியுள்ளது.
தெற்கு ஈரானில் உள்ள ஒரு மீனவரின் மகள் திருமண விழாவில், அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். திருமண வீடு, மரண வீடாக மாறிய இந்தச் சோக சம்பவம், உலகையே உலுக்கியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டியுள்ள குஹேஸ்டாக் (Kuhestak) என்ற கடலோர நகரில் செவ்வாய்க்கிழமை இரவு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. திருமணத்திற்காக மக்கள் கூடியிருந்த ஒரு வீட்டின் மீது அமெரிக்கா ஏவிய ஏவுகணை, அந்த வீட்டின் மேற்கூரையை முழுவதுமாகச் சிதைத்துவிட்டது.
தீப்பிழம்புகள் இரவு வானத்தை வெளிச்சமாக்கியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் 4 வயது மற்றும் 16 வயதுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களின் செருப்புகள், சிதறிக்கிடந்த இடிபாடுகளுக்கு மத்தியில் கண்டெடுக்கப்பட்டது, பார்ப்போரின் நெஞ்சை உலுக்குகிறது.
இந்தத் தாக்குதல் குறித்துப் பேசிய அந்த வீட்டின் உரிமையாளரான அலி மல்லாஹி, “என் மகள் திருமணத்திற்காக எல்லோரும் கூடியிருந்தோம். திடீரென ஒரு பயங்கர சத்தத்துடன் ஏவுகணை வந்து விழுந்தது” என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு சிறுமி இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்.
இது ஒருபுறமிருக்க, திருமண வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு தொலைத்தொடர்பு கோபுரம் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 16 வயது சிறுவன் ஒருவன் சிதறிய குண்டுகளால் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஈரானின் வான்பாதுகாப்பு மற்றும் ராடார் அமைப்புகளைத் தாக்கியதாக அமெரிக்கா கூறினாலும், அப்பாவி மக்கள் கூடும் திருமண விழாவைத் தாக்கியது ஒரு மன்னிக்க முடியாத போர்க்குற்றம் என்று ஈரான் சாடியுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானும் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது, அமெரிக்காவின் ‘SLAM-ER’ அல்லது ‘JSOW’ வகை ஏவுகணையாக இருக்கலாம் என்று ஆயுத வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம், ஒரு தொடக்கப் பள்ளி மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்ட அதே பகுதிக்கு அருகில்தான், இப்போதும் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.
போரின் பெயரால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்படுவது எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி, இப்போது உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
