தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 4-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 29 மற்றும் 30-ம் தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் வடகடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 3-ம் தேதியும் இதே பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. செப்டம்பர் 4-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 2 வரை தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
