தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை…

கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளில் இருந்து உலக மக்கள் மெல்ல மீண்டு வரும் நிலையில், பல்வேறு வைரஸ் தொற்றுகள் அவ்வப்போது அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே H1N1 வகையைச் சேர்ந்த பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதத்தில் 19 ஆக இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 339 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பன்றிக்காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், தலைவலி, உடற்சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை காணப்படலாம். சிலருக்கு மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் ஏற்படக்கூடும்.

எனவே, சளி, காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மருந்தகங்களில் தானாக மருந்துகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெறுவது அவசியம்.

Related News

Latest News