ஈரான் போர் காரணமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. சிலிண்டர் புக்கிங் இடைவெளி நீட்டிக்கப்பட்டதுடன், புதிய வீட்டு உபயோக கேஸ் இணைப்புகள் வழங்குவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது போர் சூழல் ஓரளவு தணிந்திருந்தாலும், புதிய கேஸ் இணைப்புகள் மீதான கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிறது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் 14.2 கிலோ சிலிண்டருக்கான புதிய இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளன. இதனால் பலர் மாதக்கணக்கில் விண்ணப்பித்து காத்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
புவிசார் அரசியல் சூழல் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே உள்ள நுகர்வோருக்கு தடையின்றி சிலிண்டர் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மேற்காசிய நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும் புதிய இணைப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புதிய இணைப்பு தேவைப்படுவோர் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையுள்ள மினி சிலிண்டர்களை பயன்படுத்தலாம் என விநியோகஸ்தர்கள் பரிந்துரைக்கின்றனர். இவை உடனடியாக வாங்கி, பின்னர் ரீஃபில் செய்ய முடியும்.
இந்தியா தனது எல்பிஜி தேவையில் கணிசமான பகுதியை இறக்குமதி செய்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது விநியோகத்தை சிக்கலாக்கியது. இதனை சமாளிக்க உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட்டதுடன், அமெரிக்காவில் இருந்தும் எல்பிஜி இறக்குமதி செய்யப்படுகிறது.
