வெங்காயத்தின் விலை வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் என்ற கவலை பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. விலை நிலைப்படுத்தல் நிதியின் கீழ் 2026-27ஆம் ஆண்டுக்காக 2 லட்சம் டன் ரபி பருவ வெங்காயத்தை கொள்முதல் செய்து இருப்பில் வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 1.21 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவை அதிகரிக்கும் பகுதிகளுக்கு இந்த இருப்பு வெங்காயத்தை விரைவாக அனுப்பி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அரசு இருப்பில் உள்ள வெங்காயத்தை கிலோ ரூ.35க்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. NCCF, NAFED உள்ளிட்ட கூட்டுறவு அமைப்புகளின் விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் பல்வேறு நகரங்களில் விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது.
வெங்காயத்தை உற்பத்தி பகுதிகளில் இருந்து அதிக தேவை உள்ள நகரங்களுக்கு விரைவாக கொண்டு செல்ல ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ சிறப்பு ரயில் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2025-26ஆம் ஆண்டில் 86 ரயில் தடங்களில் சுமார் 88,000 டன் வெங்காயம் 16 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. நடப்பு ஆண்டில் நாசிக்கில் இருந்து டெல்லிக்கு முதல் கந்தா எக்ஸ்பிரஸ் புறப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயம் தற்போது கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையாகிறது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 26ஆம் தேதி சராசரி சில்லறை விலை ரூ.37.87 ஆக இருந்தது. ஆவணி திருமண சீசனில் தேவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், அரசு இருப்பு மற்றும் விநியோகத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் வெங்காய விலை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
