ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் வாய்ப்பு!!

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் eKYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பலமுறை அவகாசம் வழங்கப்பட்டும் eKYC செய்யாமல் விடுபட்டவர்களுக்கு தமிழக அரசு தற்போது சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை eKYC சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுவரை முன்னுரிமை ரேஷன் கார்டுகளில் 96.21 சதவீதம் அளவுக்கு eKYC பணிகள் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

eKYC செய்யாத குடும்ப உறுப்பினர்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் அட்டையை ஸ்கேன் செய்து, எந்தெந்த உறுப்பினர்கள் eKYC செய்ய வேண்டும் என்பதை தெரிவிப்பார்கள். அதன்பின் ஆதார் எண்ணை வழங்கி கைரேகை பதிவு செய்யலாம். இந்த சேவை முற்றிலும் இலவசமாகும்.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு eKYC-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு கைரேகை பதிவு சாத்தியமில்லையெனில் கருவிழி மூலம் சரிபார்ப்பு செய்யப்படும்.

எனவே, இதுவரை eKYC முடிக்காதவர்கள் இந்த சிறப்பு முகாமை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரேஷன் கார்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கான முக்கிய ஆவணம் என்பதால், eKYC-யை விரைவாக முடிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

Related News

Latest News