நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட கடும் வெள்ளம் மனிதர்களை மட்டுமின்றி வனவிலங்குகளையும் பெரிதும் பாதித்துள்ளது.
சேறும், சகதியும் கலந்த வெள்ளத்தில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெள்ளத்தின் தாக்கம் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலும் உணரப்பட்டது. நேபாளத்தில் இருந்து பெருக்கெடுத்து வந்த வெள்ளநீர் காக்ரா ஆற்றில் நுழைந்தபோது, அதில் 5 யானைகள் அடித்துச் செல்லப்பட்டு பஹ்ரைச் பகுதியில் உள்ள கைலாஷ்புரி தடுப்பணை அருகே சிக்கின.
வேகமான நீரோட்டத்தை எதிர்த்து கரைக்கு வர முடியாமல் தவித்த யானைகள், தங்களது தலையை மட்டும் தண்ணீருக்கு மேலே வைத்துக்கொண்டு உயிருக்கு போராடின.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, வனவிலங்குகளின் நிலை குறித்து பலரும் கவலை தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் உத்தரப் பிரதேச வனத்துறை மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டனர். கடும் நீரோட்டத்தால் மீட்புப் பணி சவாலாக இருந்தபோதிலும், அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு 5 யானைகளையும் பத்திரமாக மீட்டனர்.
இயற்கைப் பேரிடர்களில் வனவிலங்குகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
