இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி; E20 பெட்ரோலால் முட்டை விலை உயர்வு? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் தற்போது E20 எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எத்தனால் உற்பத்திக்காக மக்காச்சோளம் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், கோழித் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் நேரடி தாக்கமாக முட்டையின் விலையும் கடந்த ஓராண்டில் 35 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்காச்சோளம் கோழிகளுக்கான முக்கிய தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தற்போது உற்பத்தியாகும் மக்காச்சோளத்தில் கணிசமான அளவு எத்தனால் உற்பத்திக்காக அனுப்பப்படுவதால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ.14,000-ல் இருந்து ரூ.26,500 வரை உயர்ந்துள்ளது.

இதனால் முட்டை உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. முன்பு ஒரு முட்டையை உற்பத்தி செய்ய ரூ.4 முதல் ரூ.4.50 வரை செலவான நிலையில், தற்போது ரூ.5.20 முதல் ரூ.5.50 வரை செலவாகிறது. நாமக்கலில் முட்டை பண்ணை கொள்முதல் விலை ரூ.5.20 ஆக உள்ளது. வடமாநிலங்களில் சில இடங்களில் பண்ணை விலையே ரூ.7 வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

குளிர்காலத்தில் முட்டைக்கான தேவை வழக்கமாக அதிகரிக்கும் நிலையில், தீவனத் தட்டுப்பாடும் தொடர்வதால் விலை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறு மற்றும் நடுத்தர கோழிப் பண்ணையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். முட்டை விலை உயர்வு பொதுமக்களின் உணவுச் செலவையும், பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து திட்டங்களையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

Related News

Latest News