இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் (சிம்பு) நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே அதிகமாக உள்ளது.
இந்நிலையில், ‘அரசன்’ படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே இசையமைப்பாளர் அனிருத் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோரை சந்தித்துள்ளார். அப்போது அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
சிம்பு-வெற்றிமாறன் கூட்டணிக்கு ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அனிருத்தின் வருகையும் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
