இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்… வெங்காயம் விலை திடீர் உயர்வு…

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தினமும் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக 55-க்கும் மேற்பட்ட லாரிகளில் வெங்காயம் வரும் நிலையில், கடந்த சில நாட்களாக வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மத்திய அரசு கையிருப்பில் உள்ள வெங்காயத்தை சென்னை, மதுரை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வருகிறது. மேலும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35-க்கு மானிய விலையில் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று கோயம்பேடு சந்தைக்கு 45 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வந்துள்ளது. 10 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.35-க்கு விற்பனையான நாசிக் வெங்காயம் தற்போது ரூ.55 ஆக உயர்ந்துள்ளது. வெளிச்சந்தையில் கிலோ ரூ.70 வரை விற்கப்படுகிறது.

சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் கிலோ ரூ.80 வரையிலும், சில்லறை கடைகளில் ரூ.110 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து குறைவு, பருவம் தவறிய மழை மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாக விலை மேலும் உயர்ந்து, ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரை செல்ல வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News