ரத்த சிவப்பாக மாறும் நிலா? ஆகஸ்ட் 28-ல் வானில் நடக்கும் அதிசயம்!

வானத்தை உற்று நோக்கும் ஆர்வலர்களுக்கும், இயற்கை அதிசயங்களை ரசிப்பவர்களுக்கும் ஒரு மிக முக்கியமான செய்தி. வரும் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி, அதாவது ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று, வானில் ஒரு மிக அபூர்வமான பகுதி சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

இந்த நிகழ்வு ஒரு பகுதி சந்திர கிரகணம் என்று அழைக்கப்பட்டாலும், இது ஒரு ‘ஆழ்ந்த பகுதி கிரகணம்’ என்பதால், நிலவின் சுமார் 96 சதவீதப் பகுதியை பூமியின் கருநிழல் முற்றிலுமாக மறைக்கப்போகிறது.

இதனால் நிலவு பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு முழு சந்திர கிரகணத்தைப் போலவே மிகத் தெளிவாகவும், பிரம்மாண்டமாகவும் காட்சியளிக்கும்.

பொதுவாக சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போதுதான் சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்போது பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து செல்லும் சூரிய ஒளியானது, வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு சிவப்பு நிற ஒளியாக நிலவின் மீது படுகிறது. இதனால்தான் நிலவு ஒரு அழகான செம்பு அல்லது ரத்தச் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது.

இதையே வானியலாளர்கள் ‘பிளட் மூன்’ அல்லது ‘ரத்த நிலவு’ என்று அழைக்கிறார்கள். வழக்கமாக முழு சந்திர கிரகணத்தின் போது மட்டுமே இவ்வளவு பிரகாசமான சிவப்பு நிறத்தைத் தரிசிக்க முடியும்.

ஆனால், இந்த முறை 96 சதவீத நிலவு மறைக்கப்படுவதால், அந்த மீதமுள்ள 4 சதவீத விளிம்பு வெளிச்சத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களும் ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்பதே இந்த நிகழ்வின் தனிச்சிறப்பு.

உலக அளவில் சுமார் 100 கோடி மக்கள் இந்த அதிசயத்தை நேரடியாகக் காண வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த கிரகணம் மிகவும் தெளிவாகப் புலப்படும்

அதேபோல் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் இதனைப் பகுதியளவு காண முடியும். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை நமக்கு ஒரு சின்ன ஏமாற்றம் காத்திருக்கிறது.

இந்த கிரகணம் நிகழும் நேரத்தில் இந்தியாவில் பகல் பொழுதாக இருப்பதால், நம்மால் இதனை நேரடியாகக் காண முடியாது.

இந்திய நேரப்படி பார்த்தோமானால், ஆகஸ்ட் 28 காலை 8 மணி 4 நிமிடங்களுக்கு இந்த கிரகணம் தொடங்குகிறது. சரியாக காலை 9 மணி 43 நிமிடங்களுக்கு நிலவு முழுமையான சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் உச்சக்கட்ட நிகழ்வு அரங்கேறும்.

பின்னர் காலை 11 மணி 22 நிமிடங்களுக்கு இந்த கிரகணம் முழுமையாக நிறைவடையும். இந்தியாவில் வசிப்பவர்கள் இதனை நேரில் பார்க்க முடியாவிட்டாலும், இணையதளம் வாயிலாக நேரலையில் இந்த வானியல் அதிசயத்தை ரசிக்க முடியும்.

Related News

Latest News