வங்கிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு மிக முக்கியமான எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஒன்பது முக்கிய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU), இரண்டு கட்டங்களாக நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் என்பது இரண்டு நிலைகளாகத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாகச் செப்டம்பர் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால், செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இதைவிடப் பெரிய பாதிப்பு செப்டம்பர் மாத இறுதியில் காத்திருக்கிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம். செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் 26-ம் தேதி நான்காவது சனிக்கிழமை மற்றும் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்களும் தொடர் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் மாத இறுதியில் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காது.
குறிப்பாகப் பொதுத்துறை வங்கிகளில் பணப் பரிமாற்றம் முதல் காசோலை பரிவர்த்தனைகள் வரை அனைத்தும் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த அதிரடி போராட்டத்திற்குப் பின்னால் வங்கி ஊழியர்களின் நீண்ட காலக் கோரிக்கைகள் சில இருக்கின்றன. வங்கிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை நாளாக அறிவிக்க வேண்டும், அதாவது அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது அவர்களின் மிக முக்கியமான கோரிக்கை.
மேலும், தற்போது அமலில் உள்ள செயல்பாட்டு அடிப்படையிலான ஊக்கத்தொகை முறையை (PLI) ரத்து செய்ய வேண்டும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் திருத்தங்கள் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தங்களின் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் அக்டோபர் 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இந்த வேலைநிறுத்த நாட்களில் வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், ஏடிஎம் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் ஓரளவுக்குச் செயல்பட வாய்ப்புள்ளது.
இருந்தாலும் பணத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதால், பொதுமக்கள் தங்களின் வங்கி சார்ந்த அவசர வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக்கொள்வது நல்லது.
