சொந்த வீடு என்பது ஒவ்வொரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் ஆகச்சிறந்த கனவு. அந்தக் கனவை நனவாக்கக் காத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான மற்றும் ஆறுதலான செய்தியை வெளியிட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்த வீடுகளின் விலை, இப்போது சற்று நிதானிக்கத் தொடங்கியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, நாட்டின் முக்கிய 18 நகரங்களில் வீடுகளின் விலை உயர்வு வேகம் கடந்த காலாண்டை விடக் கணிசமாகக் குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், வீடுகளின் ஆண்டு விலை வளர்ச்சி விகிதம் 3.6 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
இதுவே கடந்த காலாண்டில் 4.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, வீடுகளின் விலை இன்னும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனால் அந்த விலையேற்றத்தின் வேகம் இப்போது குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் அகில இந்திய வீட்டு விலைக் குறியீடு 117.5 புள்ளிகளாக உயர்ந்துள்ளது, இது முந்தைய காலாண்டை விட 1.1 சதவீதம் மட்டுமே அதிகமாகும்.
நகரங்கள் வாரியாகப் பார்த்தால் ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. சண்டிகர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் வீடுகளின் விலை மற்ற நகரங்களை விடக் கூடுதலாக உயர்ந்துள்ளது.
சரி, நமது சென்னை மற்றும் பெங்களூருவின் நிலை என்ன? என்று பார்த்தால், இந்த இரண்டு மெகா நகரங்களிலும் வீடுகளின் விலை ஆண்டு அடிப்படையில் தொடர்ந்து வலுவான வளர்ச்சியையே பதிவு செய்துள்ளன.
ஆனால், டெல்லி என்.சி.ஆர் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் வீட்டு விலை வளர்ச்சி மிகவும் மந்தமாகவே உள்ளது.
வீடு விலை உயர்வு வேகம் குறையக் காரணம் என்ன தெரியுமா? மிக முக்கியமாக, பெரிய நகரங்களில் புதிய சொத்துப் பதிவுகளின் எண்ணிக்கை கடந்த காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது சற்று சரிந்துள்ளது.
மேலும், ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை உயர்த்தாமல் நிலையாக வைத்திருந்ததும் ரியல் எஸ்டேட் விலைகள் கட்டுக்குள் இருக்க ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.
மொத்தத்தில், ரியல் எஸ்டேட் சந்தையில் நிலவும் இந்த நிதானமான போக்கு, வீடு வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
உங்கள் பகுதியில் வீடுகளின் விலை எப்படி இருக்கிறது? இந்த விலை மாற்றம் உங்களுக்குச் சாதகமாக இருக்குமா? உங்கள் கருத்துக்களைக் கமெண்டில் பதிவிடுங்கள்.
