உங்களுடைய வருமான வரி விவரங்கள் மற்றும் பி.எஃப் கணக்குத் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? உங்களின் மிக முக்கியமான நிதித் தரவுகளைத் தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக அணுகி, அதை வணிக ரீதியாகப் பயன்படுத்தி வருவதாக எழுந்துள்ள புகார் இப்போது இந்தியா முழுவதும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள உச்ச நீதிமன்றம், மத்திய அரசிற்கு ஒரு மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மற்றும் சில தொழில்நுட்ப அமைப்புகள், மக்களின் வருமான வரி தாக்கல் விவரங்கள் மற்றும் பி.எஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட வேலைவாய்ப்புத் தகவல்களை ரகசியமாக எடுத்து விற்பனை செய்வதாக ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது
பான் கார்டு மற்றும் யு.ஏ.என் எண்கள் மூலம் ஒரு தனிநபரின் முழு நிதி வரலாற்றையும், அவர் எங்கெல்லாம் வேலை பார்த்தார், எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் போன்ற ரகசியத் தரவுகளைப் தனியார் நிறுவனங்கள் விலைக்கு வாங்குவதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, பார்ம் 26-ஏ.எஸ் மற்றும் பி.எஃப் பாஸ்புக் போன்ற மிகவும் ரகசியமான ஆவணங்கள் சில தனியார் இணையதளங்களில் எளிதாகக் கிடைப்பது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மக்களின் தனிப்பட்ட தரவுகள் வணிக ரீதியாகச் சுரண்டப்படுவதைக் குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சனைக்கு உரிய நிபுணர்களின் உதவியுடன் ஒரு ‘ஆன்டி-டோட்’ அதாவது ஒரு மாற்று மருந்தைத் தயார் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இதுபோன்ற தரவுத் திருட்டுகளைத் தடுக்கவும், தவறான முறையில் தகவல்கள் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்தவும் நான்கு மாதங்களுக்குள் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளது.
பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும்போது ‘பேக்ரவுண்ட் வெரிஃபிகேஷன்’ எனப்படும் பின்னணி சரிபார்ப்பு நடப்பது இயல்பானதுதான்.
ஆனால், ஒரு தனிநபரின் அனுமதியின்றி, அரசாங்கத் தரவுத்தளங்களில் உள்ள ரகசியத் தகவல்களைத் தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாகப் பெறுவது என்பது தனிமனித உரிமையைப் பறிக்கும் செயல்.
உங்கள் பான் எண் தெரிந்தாலே உங்களின் மொத்த ஜாதகத்தையும் ஒரு தனியார் நிறுவனம் எடுத்துவிட முடியும் என்றால், நம்முடைய டிஜிட்டல் பாதுகாப்பில் ஒரு மிகப்பெரிய ஓட்டை இருப்பதாகவே அர்த்தம்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் எந்தவொரு தனியார் நிறுவனமும் சட்டவிரோதமாகத் தரவுகளைத் திருடியதாக இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கவில்லை.
ஆனால், இப்படித் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதா என்பதையும், தற்போதுள்ள பாதுகாப்பு முறைகளில் உள்ள இடைவெளிகளையும் ஆராயும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
வரும் நான்கு மாதங்களில் மத்திய அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தான், கோடி கணக்கான இந்தியர்களின் நிதித் தரவுகள் பாதுகாப்பாக இருக்குமா என்பதைத் தீர்மானிக்கப் போகிறது.
